Friday, April 8, 2011

திருச்சியில் பிடிபட்ட 5 கோடிக்கு உரிமை கோரும் ஆம்னி பஸ் உரிமையாளர்!

திருச்சியில் பெண் ஆர்.டி.ஓ. சங்கீதாவால் பறிமுதல் செய்யப்பட்ட, 5.11 கோடி ரூபாய் தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக முக்கிய பிரமுகரால் அனுப்பி வைக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அந்த பணம் தன்னுடையது தான் எனறு ஒரு ஆம்னி பஸ் உரிமையாளர் கூறியுள்ளார்.

திருச்சி பொன்னகரில் உள்ள ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ்சில், ஐந்து பைகளில் அடுக்கி,பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஐந்து கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை,பெண் ஆர்.டி.ஓ., சங்கீதா பறிமுதல் செய்தார். அந்த பணம், வருமான வரித்துறை துணை கமிஷனர் ஆல்பர்ட் மனோகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.அந்த பணத்தை பதுக்கி வைத்திருந்ததற்காக, ஆம்னி பஸ் உரிமையாளர் உதயகுமாரன், அவரது மகன் அருண் பாலாஜி, மேலாளர் பாலு ஆகியோரிடம், வருமான வரித்துறையினர், நேற்று முன்தினம், இரவு 10 மணி வரை விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பணம் தன்னுடையது தான் என்றும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கானது என்றும், ஆம்னி பஸ் உரிமையாளர் உதயகுமாரன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்காக சரியான கணக்கை, அவரால் காட்ட முடியவில்லை. இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பணம் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆம்னி பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட இருந்தது எனும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:மத்திய மண்டலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு (குறிப்பிட்ட சிலரை தவிர) திருச்சியில் உள்ள தி.மு.க. முக்கிய புள்ளி மூலம் தான் தேர்தல் செலவுக்கான பணம் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த முக்கிய புள்ளி எம்.ஜே.டி. ஆம்னி பஸ் மூலம் தான் வேட்பாளர்களுக்கான பணத்தை அனுப்பி வந்துள்ளார்.
அப்படி செல்லவிருந்த பணம் தான், "உள்குத்து' காரணமாக ஆர்.டி.ஓ.விடம் சிக்கி விட்டது. தி.மு.க. வின் முக்கிய புள்ளி, பணம் போனால் போகிறது என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால், ஆம்னி பஸ் உரிமையாளருக்கோ, பணத்தை விட மனமில்லை போலும். அதனால் தான் அது தன்னுடைய பணம் என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.மேலும் கணக்கில் காட்டாத பணம் என்றால், அதற்கு உரிய வருமான வரியை கட்டிவிட்டு, மீதி பணத்தையாவது மீட்டுக் கொள்வோம் என்ற நினைப்பில், ஆம்னி பஸ் உரிமையாளர் பணத்துக்கு சொந்தம் கொண்டாட முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza