Friday, April 8, 2011

பனாமா கப்பல் முழுவதும் மூழ்கும் அபாயம் - 20000 லிட்டர் டீசல்?

பனாமா கப்பல் எந்த நேரத்திலும் கடலினுள் முழுமையாக மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டீசல் டேங்க் உடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாககப்பட்டிணத்தில் இருந்து இரும்பு தாதுகளை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் சென்ற பனாமா நாட்டு கப்பல் கடந்த 29ம் தேதி குமரி மாவட்டம் கடியப்பட்டிணம் பகுதியில் தரை தட்டி நின்றது. தொடர்ந்து கப்பலின் வலதுபுறம் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கடலில் சீற்றம் காரணமாக கப்பலுக்குள் நீர் புகுந்ததால் 12 மீட்டர் ஆழத்திற்குக் கப்பல் மூழ்கியது.

கப்பலின் உள்பகுதியில் மீட்பு குழுவினர் ஆய்வு செய்த போது கப்பலின் நடுப்பகுதி பலத்த சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கப்பல் இரண்டு துண்டாக உடைந்து எந்த நிமிடத்திலும் கடலுக்குள் முற்றிலும் மூழ்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை ஏற்பட்டால் கப்பலின் டீசல் டேங்க் உடைந்து 20 ஆயிரம் லிட்டர் டீசலும் கடலில் பரவும். இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். ஏற்கனவே கடந்த 3 நாட்களாக கப்பலில் இருந்து டீசல் லேசாக கசிந்து வெளியேறி கடல் நீரில் பரவி வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாக உத்தரவின்படி மாசு கட்டுபாடு வாரிய அதிகாரிகள், மரைன் காவலர், மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர காவல் படையினர், துறைமுக அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடியப்பட்டிணம் கடல் பகுதியில் முழுமையான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கப்பலில் உள்ள டீசலை வெளியேற்றுவதற்கு தொடர் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக டீசலை வெளியேற்ற நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் துறைமுகத்திலிருந்து அதி நவீன உபகரணங்கள் கொண்ட கப்பல் கடியப்பட்டிணம் வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கப்பல் நாளை மறுதினம் குமரி கடல் பகுதிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கப்பல் மூழ்கி டீசல் டேங்க் உடைந்தால் வெளியேறும் டீசல் படலத்தை உறிஞ்சி எடுக்க கடலோர காவல்படை கப்பல்களும் தயார் படுத்தப்பட்டுள்ளது.

கப்பலின் டேங்கில் இருந்து வெளியேறும் டீசல் 6 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது தார் படலமாக மாறிவிடும். தற்போது கடியப்பட்டிணம் கடல் பகுதியில் லேசான தார் படலம் ஏற்பட்டுள்ளது. பனாமா கப்பலில் 20 ஆயிரம் லிட்டர் டீசல் உள்ளது. இது வெளியேறினால் மணவாளக்குறிச்சியில் இருந்து ஆஸ்திரேலியா வரை தென்கிழக்கு திசையில் தார் படலம் ஏற்படலாம். இதில் கன்னியாகுமரி வரை பாதிக்கப்படும் பகுதியாக இருக்கும்.

முதலில் 100 மீட்டர் அகலத்தில் ஏற்படும் தார் படலம் பின்னர் விரிவடைந்து கொண்டே செல்லும். தூரம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அடர்த்தி வெகுவாக குறையும். எனவே கன்னியாகுமரி வரை இப்படலம் சுற்றுசூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

கப்பலில் 25,500 டன் இரும்புத்தாது உள்ளது. இதன் கரையும் திறன் மிகவும் குறைவு (400 பில்லியன் நானோ கிராம்) என்பதால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

இதற்கு முந்தைய நிகழ்வுகளில் இதுபோன்ற இரும்பு கழிவால் கடல்வாழ் சிறிய தாவரங்கள் பெருமளவு பாதிக்கப்படவில்லை என ஆய்வுகள் தெரிவித்தாலும் இந்தத் தாது கடலில் மூழ்கினால் தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் அவசியம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza