நள்ளிரவில் தேர்தலுக்கு வினியோகிப்பதற்காக பண மூட்டை புதைக்கப்பட்டதாக வந்த தகவலால் காரைக்காலில் பரபரப்பு ஏற்பட்டது. புதைக்கப்பட்ட இடத்தை தோண்டிப் பார்த்த போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
காரைக்கால் தலத் தெரு தெற்கு தெரு பகுதியில், நேற்று நள்ளிரவு சாக்கு மூட்டையுடன் சென்ற மர்ம நபர், ஒரு வீட்டின் பின்புறத்தில் மூட்டையைப் புதைத்தார். சாக்கு மூட்டையுடன் சென்ற மர்ம நபரைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், காங்., வேட்பாளர் பி.ஆர்.திருமுருகன் தேர்தல் செலவுக்காக பணம் மற்றும் மதுபானங்களைக் கொடுத்து அனுப்பி புதைத்து வைத்துள்ளார் என, போலீசாரிடம் புகார் கூறினர்.
இதையெடுத்து, நகர போலீசார் ஒரு படையுடன் சென்று, அப்பகுதியில் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மர்மபொருள் புதைக்கப்பட்ட பகுதியில் பூக்கள், சில்லரை காசுகள் கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம மூட்டை புதைக்கப்பட் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடந்தது.
அங்கு வந்த நபர் யார் என்று தெரியாது, தாங்கள் புதிதாக குடி வந்ததாக வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர். புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்க்க போலீசார் முடிவு செய்தனர். மர்ம பொருள் புதைக்கப்பட்ட பகுதியில் போலீசார் தோண்ட ஆரம்பித்தனர். குழியில் மூட்டை இருந்தது.
ஆர்வமுடன் மூட்டையை எடுத்த போலீசார், அதைத் திறந்து பார்த்த போது மூட்டையில், ஒரு இறந்த நாயின் உடல் இருந்தது. போலீசார், வீட்டின் உரிமையாளர் செந்திலை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். "தன் வீட்டில் ஆசையாக வளர்த்த நாய் இறந்துவிட்டதால், அதை வாடகை வீட்டிற்கு கொண்டு வந்து புதைத்தேன் ' என அவர் தெரிவித்தார்.
பணம் புதைக்கப்பட்டதாக வந்த தகவலால் இரவு முழுவதும் பரபரப்புடன் இருந்த போலீசார், குழியில் இறந்த நாயின் உடல் இருந்ததைக் கண்டு நொந்துபோயினர்.
0 கருத்துரைகள்:
Post a Comment