Tuesday, September 17, 2013

இஸ்ரேலும் இரசாயன ஆயுத பரிசோதனைக்கு தயாராக அழுத்தம் அதிகரிப்பு!



சிரியாவை தொடர்ந்து இஸ்ரேலும் தங்களது இரசாயன ஆயுதங்களை ஐ.நாவின் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பிற நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்ற காரணம் காட்டி இஸ்ரேல் இதுவரை சர்வதேச இரசாயன ஆயுத ஒப்பந்தத்தை அங்கீகரிக்கமாட்டோம் என்று கூறி வந்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க சிரியா ஒப்புக்கொண்டுள்ளதால் இஸ்ரேல் மீதும் சர்வதேச அழுத்தம் இறுகி வருகிறது.
சிரியா வசமிருக்கும் இரசாயன ஆயுதங்களுடன், இஸ்ரேல் வசமிருக்கும் இரசாயன ஆயுதங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேலின் ராணுவ சக்திக்கு பதிலடியே சிரியாவின் இரசாயன ஆயுதம் என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் தெரிவித்திருந்தார்.
அணு ஆயுத சக்திப் பெற்ற இஸ்ரேலுடன் சம அளவிலான சக்தியை பெறுவதற்காகவே சிரியாவின் இரசாயன ஆயுதம் என்று பாரிஸில் ரேடியோ பாரிஸிற்கு அளித்த பேட்டியில் ரஷ்ய தூதர் விளக்கமளித்திருந்தார்.
1993-ஆம் ஆண்டு இரசாயன ஆயுத ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டது. ஆனால், அதனை ஒருபோதும் இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை. தங்களின் அணுசக்தி திட்டத்தை வெளியுலகிற்கு தெரியாமல் மூடி மறைத்து வரும் இஸ்ரேல், அங்கு சர்வதேச சோதனை நடத்தவும் ஒப்புக்கொள்ளவில்லை.
இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக கருதப்படும் சிரியா, ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இரசாயன ஆயுத தயாரிப்பு, சேகரித்தல் ஆகியவற்றை தடைச் செய்வது, தற்போது தன் வசமிருக்கும் இரசாயன ஆயுதங்களை அழிப்பது ஆகிய நிபந்தனைகளை கொண்ட ஒப்பந்தத்தில் இணைய சிரியா கடந்த செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளது. சிரியாவின் மனுவை ஐ.நா ஏற்றுக்கொண்டது.
சிரியாவும், எகிப்தும் இஸ்ரேலை சுட்டிக்காட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்து வந்தன. இஸ்ரேல் அணுஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும் மற்றும் டிமொன்னாவில் உள்ள அணு உலையை சர்வதேச பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இரு நாடுகளும் விடுத்திருந்தன.
Info : Newindia.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza