Thursday, August 8, 2013

ஈகைத் திருநாளில் நீதி நிலைபெற பிரார்த்திப்போம் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி


நம்பிக்கையாளர்களுக்கு உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்த வந்த ரமலான் மீண்டும் ஒரு முறை நம்மை விட்டு பிரிகின்றது. ரமலானின் வெற்றி இறையச்சத்தில் தங்கி இருக்கிறது. உள்ளத்தையும், உணர்வையும் அல்லாஹ்வின் பயிற்சி பாசறையில் ஈடுபடுத்திய நமக்கு அல்லாஹ் தக்வா (இறையச்சம்) எனும் உன்னதமான பண்பைத் தந்தருள் புரிவானாக !

நோன்பில் பெற்ற படிப்பினையை ஏனைய பதினோரு மாதங்களிலும் தொடரும் மாந்தருக்கு ஈருலகிலும் வெற்றியுண்டு. படிப்பினையை பெருநாளுடன் முடித்துக் கொண்டவர்களுக்கு ஈத்- தோல்வியின் நாளாக முடிவடையும்.


உள்ளத்திலும் , இதய நரம்புகளிலும் மகிழ்ச்சியை தாண்டவமாடச் செய்யும் புண்ணிய தினம் தான் பெருநாள் தினம். மகிழ்ச்சி நிறைந்த இந்நன்னாளில் வறுமையில் வாடும் , சிறைகளில் மற்றும் அகதிகள் முகாம்களில் பரிதவிக்கும் நமது சமுதாய சொந்தங்களை நினைவு கூர்வது, பிரார்த்திப்பது, துன்பங்களை நீக்க பாடுபடுவது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும்.

அதிலும் குறிப்பாக நாம் வாழும் தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் , அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய்வழக்குகள் புனைந்து UAPA போன்ற கொடூரமான கருப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதும் , சித்ரவதை செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் அவல நிலைமாற இருகரம் ஏந்தி இறைவனைப் பிரார்த்திப்பத்தோடு , நீதியை நிலைநாட்டும் போராட்டக்களங்களில் பங்கு பெறுவது காலத்தின் கட்டாயம்.

போராட்டங்கள் , விழிப்புணர்வு பிரச்சாரங்கள் , சமூக மேம்பாடு என பல்வேறு தளங்களில் நாம் முன்னின்று உழைக்க வேண்டும். நீதியை நிலைநாட்டக் கூடிய பாதையில் அதற்கான பணிகளை செய்வதற்கு ஏற்ப நமது உள்ளத்தை பண்படுத்த வேண்டும். தீமைகளுக்கு எதிராக போராடக்கூடிய மனோ பலத்தை , உளஉறுதியை நோன்பு நம்மில் வளர்த்தெடுத்திருக்கிறது.

நோன்பில் பெற்ற பாடங்களையும், குணநலன்களையும் வரும் காலங்களில் அமல்படுத்தி பழைய துர்க்குணங்களை விட்டொழித்து, எளிமையை கையாண்டு, அன்பால் அனைவரையும் அரவணைத்து, துயருறும் மக்களுக்கு ஆதரவாக நீதிக்காக களமிறங்கி, புத்தாடைகளை அணியும் பொழுது புது மனிதனாக மாறி பெருநாளை நாம் கொண்டாடுவோம். உலக மக்கள் அமைதியாக வாழ நீதியை நிலைநாட்ட போராடுவோம் என இந்நன்னாளில் சங்கல்பம் எடுப்போம்! ‘தகப்பல் அல்லாஹ் மின்னா வமின்கும்’ - அல்லாஹ் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்றுக்கொள்வானாக!

இப்படிக்கு

A.S.இஸ்மாயில்

மாநில தலைவர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தமிழ்நாடு

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza