Thursday, August 15, 2013

சுதந்திர தினம் கொண்டாட தமிழக காவல்துறை தடை ஆகஸ்ட் 17 டி.ஜி.பி அலுவலகம் முற்றுகை தமிழகம் முழுவதும் போராட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் அறிவிப்பு

சென்னை: முஸ்லிம்கள் சுதந்திர தினம் கொண்டாட தமிழக காவல்துறை தடை விதித்ததை கண்டித்து நாளை 17.8.2013 அன்று சென்னை டி.ஜி.பி. அலுவலக முற்றுகை போராட்டமும் மற்றும் அனைத்து மாவட்டம் தோரும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவுசெய்துள்ளது.

இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், “

67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கடந்த 2 வருடங்களாக முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடைவிதித்து சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்வதை தடை செய்ததும், இவ்வருடம் சுதந்திர தின பொதுக்கூட்டம் கூட நடத்துவதற்கு தடை விதித்திருப்பதும் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது.
காவல்துறையிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்த போது பல இடங்களில் ‘‘நீங்கள் ஒரு தனியார் அமைப்பு, ஆகவே ஒன்று நீங்கள் முந்தைய தினமான ஆகஸ்ட் 14ம் தேதி கொண்டாடுங்கள் அல்லது பிந்தைய தினமான ஆகஸ்ட் 16ம் தேதி கொண்டாடுங்கள். ஆகஸ்ட் 15 அன்று தனியார் நிறுவனங்களெல்லாம் சுதந்திர தினம் கொண்டாடக் கூடாது’’ எனக் கூறி மக்களின் சுதந்திர தின கொண்டாட்டத்தை அரசுடமையாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில் தானா ? என்ற கேள்வியை மக்கள் மன்றத்தில் எழுப்பியுள்ளது.

தமிழக காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத போக்கைக் கண்டித்து ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் டி.ஜி.பி அலுவலக முற்றுகைப் போராட்டமும், மற்ற மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க, ஜனநாயக அடிப்படை உரிமையை மறுக்கும் தமிழக காவல்துறையின் ஜனநாயக விரோத போக்கைக் கண்டித்து நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டங்களில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு ஜனநாயகத்தின் ஒழுக்க விழுமியங்களை சீர்குலையாமல் பாதுகாத்திட அன்புடன் அழைக்கிறோம்”, என தெரிவித்துள்ளார்.

Info: popularfronttn.org

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza