புதுடெல்லி:இறையில்லமும், இந்தியாவின் வரலாற்றுச் சின்னமுமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட சங்கபரிவார தலைவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மன்னிப்பு கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியுள்ளது. தாமதமாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததை மன்னித்து ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீதியை நிலைநாட்ட முடியாத வகையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். கொடிய தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் விசாரணையை எதிர்கொள்ளாமலேயே தப்பிக்க வாய்ப்புள்ளது என்று சி.பி.ஐ தனது மனுவில் கூறியுள்ளது.
பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில், குற்றச்சதியில் ஈடுபட்டதாக எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை அலாகாபாத் உயர் நீதிமன்றமும் 2010-ம் ஆண்டு மே 21-ம் தேதி உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டிய சி.பி.ஐ. தாமதம் செய்தது. 167 நாள்களுக்குப் பின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அத்வானி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதற்கிடையே சி.பி.ஐ.யின் தாமதத்துக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. டி.ஐ.ஜி நீரஜா கோட்ரு பிரமாணப் பத்திரத்தை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். சி.பி.ஐ. தரப்பில் வழக்குரைஞர் பி.பி. ராவ் ஆஜரானார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, ஜே.எஸ். கெஹர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சி.பி.ஐ. தரப்பில் நீதிபதிகளிடம் அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்துக்கு உள்நோக்கம் எதுவுமில்லை. மேல்முறையீட்டுக்கான மனுவை தாக்கல் செய்வதற்கு முன், நூற்றுக்கணக்கான ஆவணங்களை சொலிசிட்டர் ஜெனரல் படிக்க வேண்டியிருந்தது. அவர் 2ஜி உள்ளிட்ட பிற வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. மேலும் சொலிசிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து அனைத்து விவரங்களையும் நன்கு தெரிந்துவைத்துள்ள அதிகாரிகள் இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், தவறு நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக மேல்முறையீட்டு மனுவை மிகவும் எச்சரிக்கையுடன் தயாரிக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாகத்தான் தாமதம் ஏற்பட்டது. தாமதமாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததை மன்னித்து ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீதியை நிலைநாட்ட முடியாத வகையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். கொடிய தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் விசாரணையை எதிர்கொள்ளாமலேயே தப்பிக்க வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:”"தாமதமாக மேல்முறையீடு செய்யப்பட்டதால், இதை விசாரிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து அத்வானி உள்ளிட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, இவ்வழக்கு தொடர்புடைய அனைவரின் கருத்தையும் கேட்ட பின்பே, இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியும். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறும்” என்றனர். பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக எல்.கே.அத்வானி, கல்யாண் சிங், உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால் உள்ளிட்டோர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்ததை அலாகாபாத் உயர் நீதிமன்றம் 2010 மே 21-ம் தேதி உறுதி செய்தது. எனினும், மற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் ராய் பரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை தொடர்ந்து நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment