மதுரை:மதுரை: இஸ்லாத்தை தழுவிய ஆதிதிராவிட வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக கருத வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் கூரியூரை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான். இவர் உமர்நகர் ஜமாத் தலைவராக உள்ளார். இவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
நாங்கள் ஆதி திராவிடர் பிரிவை சேர்ந்தவர்கள். 30 ஆண்டுக்கு முன்பு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோம். எங்களுக்கு உரிய ஜாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். இதனால், இஸ்லாத்தை தழுவிய ஆதிதிராவிட பிரிவை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் மறுக்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.கேரளாவில் இஸ்லாத்தை தழுவிய ஆதிதிராவிடர்களுக்கு தனி ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை. இங்கு இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் என சான்றிதழ் அளிக்கின்றனர். இஸ்லாத்தை தழுவிய ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த ராஜாமுகமது என்பவர், டிஎன்பிஎஸ்சி நடத்திய கால்நடை உதவியாளர் தேர்விற்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை ஏன் பொதுப்பிரிவில் பரிசீலிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை தழுவிய ஆதிதிராவிட பிரிவினர் சந்திக்கும் பிரச்னைக்கு தீர்வுகாண, பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல மனுக்கள் அனுப்பினோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இஸ்லாத்தை தழுவிய ஆதிதிராவிடர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் கே.என்.பாஷா, ரவிச்சந்திரபாபு ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான், வக்கீல் ஆர்.காந்தி ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, டிஎன்பிஎஸ்பி தேர்வுக்கு விண்ணப்பித்த இஸ்லாத்தை தழுவிய ஆதிதிராவிட பிரிவை சேர்ந்தவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என கருத வேண்டும் என உத்தரவிட்டனர்.மனுவுக்கு பதிலளிக்க தலைமை செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர், டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை நான்கு வாரம் ஒத்திவைக்கப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment