Thursday, January 3, 2013

திரையுலகின் முஸ்லிம் விரோத போக்கு! விழித்தெழுமா முஸ்லிம் சமூகம்?!!


உலக அளவில் சினிமாத்துறை என்பது ஒரு வியாபார சந்தையாக இருந்து வந்தாலும். இந்தியாவில் அதையும் தாண்டி கூடுதலாக சமூக, அரசியல் தளங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு துறையாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு இயக்கமோ அல்லது அரசியலோ கொண்டு வரமுடியாத கருத்தாக்கங்களை சினிமாத்துறை மூலம் கொண்டு வரும்போது அது சிறுவர் முதல் பெரியவர் வரை  எளிதில் சென்றடைந்துவிடுகிறது.


இப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த துறை துவக்க காலம் தொட்டே இந்தியாவின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை கொடுமையான கந்து வட்டிக்காரர்கள், கடத்தல் பேர்வழிகள், தமிழ் தெரியாத சேட்டுகள் என மோசமானவர்களாகவே காட்டி வந்துள்ளது. அது அப்படியே வளர்ச்சியடைந்து அண்மைக்கால சினிமாக்களில் முஸ்லிம்களை, தேசத்துரோகிகள்,  பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, 1992 பாபர் மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு முஸ்லிம்களை தீவிரவாதியாகவும், தேசத் துரோகிகளாகவும் காட்டும் போக்கு அதிகரித்தது. ‘பம்பாய்’ போன்ற திரைப்படங்கள் அதற்கு அடித்தளமிட்டன. இந்த திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பால்தாக்கரேவிடம் திரையிடுவதற்கான அனுமதியைப் பெற்றது என்பதையும் மறப்பதற்கில்லை.

“மணிரத்தினத்தின் ‘பம்பாய்’ மிகச் சிறந்த படம். நான் படத்தைப் பார்த்தேன். சில மாற்றங்கள் மட்டும் செய்யச் சொன்னேன்  அவ்வளவுதான். பம்பாய்க் கலவரத்துக்காக நான் வருந்துவது போல ஒரு காட்சி வருகிறது. அது உண்மையல்ல; நான் எதற்காகவும் வருந்தவில்லை. கலவரத்தை சிவசேனை ஆரம்பிக்கவில்லை. ( மும்பை கலவரத்திற்கு காரணமானவர்கள் சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்தான் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன்) நாங்கள் பதிலடிதான் கொடுத்தோம்... (மற்றபடி) இது மணிரத்னம் உருவாக்கியுள்ள அற்புதமான படம்.”

(1995  மார்ச் 31, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு பால் தாக்கரே அளித்த பேட்டி இது) ஆக, 1992  பாபரி மஸ்ஜித் இடிக்கபட்ட பின்தான் இந்தியாவில் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்படுவதும், போலி வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்தது. அதனை மையமாக வைத்து சினிமாக்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் இந்தியாவை சீர்குலைக்க திட்டமிடுவது போலவும் சித்தரித்து வந்தனர். அதற்கேற்றார் போல் நாடெங்கும் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு முஸ்லிம்களே காரணம் என்று தெரிந்தோ தெரியாமலோ மீடியாக்களும், பத்திரிகைத்துறையும் முஸ்லிம் விரோத நிலைப்பாட்டை எடுத்து வந்தனர். அதனால் அன்றைய சூழ்நிலையில் பல முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என கைது செய்யப்பட்டனர். அவர்களுக்காக யாரும் போய் ஆதரவாக பேச முடியாத பயம் கலந்த நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர்.

ஆனால், இப்போது உண்மைகள் வெளிச்சத்திற்கு வரத் துவங்கியுள்ளது. 1990க்குப் பிறகு இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள் தான் என்பதும் அப்போது கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்றும் தீர்ப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

சமீபகாலத்தில் மட்டும் 20 வழக்குகளில் 10 லிருந்து 14 வருடங்கள் வரை  சிறையில் வாடிக்கொண்டிருக்கும் முஸ்லிம் இளைஞர்களை அப்பாவிகள் என நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதற்கு முன்பாகவே பல திரைப்படங்கள் தங்களால் முடிந்த அளவு முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து விட்டன. உண்மைகள் இப்படி இருக்க சமீபத்தில் வெளிவந்த திரைப்படமான ‘துப்பாக்கி’ ஒவ்வொரு முஸ்லிமும் சந்தேகத்திற்குரியவன் என்ற இறுதி தாக்குதலை முஸ்லிம் சமூகத்தின் மீது தொடுத்தது.

‘பயங்கரவாதிகள்’ என்றால் அவர்கள் சிறுபான்மைச் சமூகத்தை சேர்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று சித்தரிக்கும் பொது புத்தி உச்சத்துக்கு சென்று இருக்கிறது துப்பாக்கியில். அதிலும் சிறுபான்மையினர் குடும்பங்களும் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது வேதனை.

(நன்றி: ஆனந்த விகடன், 28.11.12)

இந்நிலையில் ‘துப்பாக்கி’ படக்குழுவினரை இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் சந்தித்து உண்மை நிலையை எடுத்துச் சொன்ன உடன் அவர்கள் மன்னிப்புக் கோரியதுடன் ஒரு சில நகர்ப்பகுதிகளில் திரைப்படத்தில் சொற்பமான மாற்றங்களையும் செய்தனர்.

இதற்கு அடுத்தபடியாக இப்போது ஒரு திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்கனவே ‘ஹேராம்’, ‘உன்னைப்போல் ஒருவன்’ போன்ற திரைப்படங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், குரோதத்தையும் உமிழ்ந்த நடிகர் கமல்ஹாசன் இப்போது எடுத்து இன்னும் திரைக்கு வராத ‘விஸ்வரூபம்’ என்ற திரைப்படம் முஸ்லிம்கள் குறித்து மிகவும் மோசமான செய்திகளை தாங்கி வருவதாக சொல்லப்படுகின்றது.

படம் திரைக்கு வரும் முன் அதனைப்பற்றி விமர்சனம் செய்வது நல்ல நடைமுறையல்ல என்றாலும் இதற்கு முன் உள்ள அனுபவங்கள், சமீபகாலமாக சந்தேகத்திற்கிடமான வகையில் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், பேட்டிகள் மற்றும் இணையத்தில் ‘யூ டியூப்பில்’ விஸ்வரூபம் தொடர்பாக காணக்கிடைத்த சில காட்சிப் பதிவுகள் முஸ்லிம் சமூகத்தில் பெரியதொரு கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதுபோன்று (உதாரணம்: துப்பாக்கி) சமூகத்தில் பிளவை உருவாக்கும் படங்களை தணிக்கை குழு எவ்வாறு அனுமதிக்கின்றது என்ற விவாதமும் சூடாக நடந்து கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை பின்வரும் பதிவுகள் சொல்கின்றன.

இந்தியாவில் ஆக கடைநிலை சமூகம் முஸ்லிம் சமூகம். தலித், மலைவாழ் மக்களை விட கீழான ஒரு வாழ்க்கையை முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். (மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி இராஜேந்திர சச்சார் அறிக்கை)

“இந்தியாவில் முஸ்லிமாக வாழ்வது குற்றமா?” (பிருந்தா காரத், பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வி)

‘இந்திய சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளில் குறிப்பாக மும்பையில் உள்ள முஸ்லிம் சிறைக்கைதிகள் பெரும்பாலானோர் அப்பாவிகள்” (TATA INSTITUTE OF SOCIAL SCIENCE)

சமீபத்தில் பிரதமரை  சந்தித்த எம்.பிக்கள் குழு  முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் போலி வழக்குகளுக்கு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகின்றீர்கள் என்று கேள்வி கேட்டு துளைத்தெடுத்தது.(தி ஹிந்து 4.06.2012)

“முஸ்லிம்” என்ற ஒரே  காரணத்திற்காக (மை நேம் இஸ் கான் என்ற திரைப்பட பெயரை  குறிப்பிட்டு) அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்காதீர்.(26.09.2012, உச்சநீதிமன்ற தீர்ப்பு)

இப்படி, இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையை அடுக்கிக் கொண்டே போகலாம்.மேலே கோடிட்டு காட்டியபடி இந்தியாவில் முஸ்லிம்களின் அவல நிலை மற்றும் இந்திய சுதந்திர  போரில் முஸ்லிம்கள் தங்கள் சதவிகிதத்திற்கும் அதிகமாக செய்த தியாகம், 1857 சிப்பாய் புரட்சி என முஸ்லிம்கள் தொடர்பாக காட்சிப்படுத்த வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.

ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு நூற்றாண்டு விழாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பையும், குரோதத்தையும் தொடர்ந்து வளர்த்து வருவதென்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

வர  இருக்கும் காலங்களில் முஸ்லிம்கள் இனியும் மௌனத்தைக் காப்பார்களானால் திரையுலகம் மேற்கத்திய பாணியில் அடுத்ததாக இஸ்லாத்தை குறிவைக்கத் துவங்கிவிடும். எனவே, உண்மைகளை உரக்கச் சொல்லி உரிமைகளை பெற்றிட ஜனநாயகரீதியான போராட்டங்களை மேற்கொள்வோம். அதர்மம் வெல்வோம்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தமிழ்நா

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza