ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் நடத்திய சிந்தனைக்கூட்டத்தில் இளவரசர் ராகுல் காந்திக்கு பட்டம் சூட்டிய கதையை படித்திருப்பீர்கள். அனைவரும் இளவரசருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே கூடவே ஒரு நமுத்துப் போன பட்டாசை கொளுத்தி விட்டார். “ஐதராபாத் மெக்கா மசூதி, மகாராஷ்டிராவின் மாலேகான், பாகிஸ்தான் செல்லும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போன்றவற்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரே காரணம்” எனக் கூறியிருந்தார்.
இந்த காவி பயங்கரவாதத்தைப் பற்றி கூறிய உடனே சங்க பரிவாரங்கள் துள்ளிக் குதித்தன. உடனே ஷிண்டே அந்த குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டோரின் பட்டியலை வெளியிட்டு வாயடைத்தார். ஆனாலும் இந்து மதவெறியர்கள் நாடெங்கும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ‘ஷிண்டே தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்து மதவெறியர்கள் கூடுதல் சினத்துடன் எகிறினர்’ என்று சிலர் கூறுகிறார்கள். ஆண்டைகளின் இத்தகைய ஆதிக்க மனோபாவம் இயல்பானது என்பதற்கு ஷிண்டேவை வைத்து மட்டுமல்ல, அம்பேத்கர் பேரைக்கூடச் சொல்லாமல் ஆமீர்கான் நடத்திய “சத்யமேவ ஜெயதே” நிகழ்ச்சியைக்கூட சான்றாக சொல்ல முடியும்.
ஷிண்டே பதவி விலக வேண்டும், மன்மோகன் சிங் – சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சங்க வானரங்கள் கோரி வரும் நிலையில் பா.ஜ.க.,வின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்நாத் சிங் திருவாய் அருளியுள்ளார். இவர்களை பயங்கரவாதிகள் என்று கூறியதால் இந்தியாவின் கவுரவம் பாழாகிவிட்டதாம். பாபர் மசூதி இடிப்பின் போது, அதை ஒட்டி நடந்த மும்பை கலவரத்தில் சிவசேனா வெறியர்கள் முசுலீம்களை கொன்ற போது, ஒரிசா பாதிரியாரை உயிரோடு கொளுத்திய போது, 2002-இல் உலகமே அதிர்ந்து நிற்கும் வண்ணம் குஜராத்தில் இசுலாமிய மக்களைக் கொன்ற போதெல்லாம் இந்தியாவின் கவுரவம் பாழாகவில்லையாம். ஒருவேளை இவையெல்லாம் இந்தியாவின் சாதனைகள் என்று கூட காவி பயங்கரவாதிகள் கருதலாம்.
ஆர்.எஸ்.எஸ் ஒரு பெரிய அமைப்பு என்பதால் அதன் பயிற்சி முகாம்களில் பலர் பங்கேற்கும் போது, அவர்களில் ஒரு சிலர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளனர் என்பதற்காக அந்த இயக்கத்தையே பயங்கரவாதமாக கருதக்கூடாது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் தவறு செய்யும் போது ஒட்டு மொத்த குடும்பத்தையே கிரிமினல்கள் என்று கூற முடியாது என்றும் வியாக்கியானம் அளித்துள்ளார்.
வேறு வழியின்றி ஆதாரங்களோடு இந்துமதவெறியர்கள் சிலர் குண்டு வெடிப்பிற்காக கைது செய்யப்பட்ட பிறகு இவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். அப்படி கைது செய்யப்பட்டவர்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் முன்னெச்செரிக்கையாக விலகியும் நிற்கிறார்கள்.
ஒரு வழியாக எங்கப்பன் குதிருக்குள் உண்டு என்று ராஜ்நாத் சிங் ஒத்துக் கொண்டிருக்கிறார். ஒரு சில ஆர்.எஸ்.எஸ்காரர்கள் குண்டு வைத்ததினாலேயே அந்த இயக்கத்தை பயங்கரவாதம் என்று கூறக்கூடாது என்று கூவும் இவர்கள் முசுலீம்கள் குறித்து மட்டும் நேரெதிராக பேசுகிறார்கள். இந்திய முசுலீம்கள் அனைவரையுமே பயங்கரவாதிகள் என்று சித்தரித்தது யார்? ராமனை வணங்கா விட்டால் இந்திய முசுலீம்கள் அனைவரும் நாட்டை விட்டு விலக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் கூறியதை வேதப்புத்தகமாக இன்றும் வணங்குவது யார்?
மேலும் இசுலாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் இந்தப் பொதுக்கருத்தை வைத்து பல அப்பாவி முசுலீம்களை கைது செய்து சிறையிலடைத்து பின்னர் அவர்கள் நிரபராதிகள் என்று பல நீதிமன்றங்கள் விடுதலை செய்ததைப் பார்த்தால் இந்த பயங்கரவாதப் பிரச்சாரத்திற்கு பலியானோர் யார், முசுலீம்களா, இந்துக்களா?
ஷிண்டே கூறியதை வைத்து பாகிஸ்தானில் செயல்படும் ஜமா – உத் -தாவா தலைவர் ஹபீஸ் சயீது இந்தியாவை ஒரு பயங்கரவாத நாடாக சித்தரிக்கிறார் என்று ராஜ்நாத் சிங் ஒநாய் கண்ணீர் விடுகிறது. இதற்கு ஏன் பாகிஸ்தான் போக வேண்டும்? எங்களைப் போன்றோர் பல முறை கூறியிருக்கிறோமே, குஜராத்திலும், காஷ்மீரிலும் அரசு மற்றும் இந்துமதவெறி பாசிச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது என்று! ஒரு வேளை இந்தியாவை பயங்கரவாதம் இல்லாத அமைதி நாடாக மாற்ற வேண்டுமென்றால் முதலில் இங்கிருக்கும் இந்துமதவெறி அமைப்புகளை ஒழிப்பதன் மூலமே அது சாத்தியம். அது முடியாத வரை இந்தியாவின் கவுரவத்தில் இந்த வில்லன் இமேஜ் இருந்தே தீரும்.
இருப்பனும் ராஜ்நாத் சிங் ஓயவில்லை. “நாங்கள் பயங்கரவாதிகள் என்றால் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.,-ஐ தடை செய்து பாருங்கள்” என்று ‘நியாயமாக சவாலும் விடுகிறார். அதை காங்கிரசு அரசு செய்யுமா? நிச்சயம் செய்யாது.
காங்கிரசே ஒரு மிதவாத இந்துத்துவக் கட்சி என்பது காந்தி காலத்தில் இருந்து தொடரும் ஒரு உண்மையாகும். அதனால்தான் கலவரம் நடத்தி பல இசுலாமிய மக்களைக் கொன்ற பால் தாக்கரே, அத்வானி, மோடி போன்ற நரவேட்டை நட்சத்திரங்களெல்லாம் இங்கே ஆரவாரத்துடன் நடமாட முடிகிறது. பாபர் மசூதி இடிப்பை முழு மனதுடன் ஆதரித்து வழியமைத்து கொடுத்தவரே காங்கிரசின் நரசிம்மராவ்தானே?
எனில் இங்கே ஷிண்டே கூறியதன் நோக்கம் என்ன? இப்படி கூறினால் சங்க பரிவாரங்களை தொடர்ந்து கூச்சல் இட வைக்கலாம். காங்கிரசின் ஊழல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பாராளுமன்றத்தில் யார் பயங்கரவாதிகள் என்ற அரட்டைக் கூச்சல் முன்னுக்கு வரலாம். இடையில் வால்மார்ட்டுக்கு அனுமதி கொடுத்தது போல வேறு ஏதாவது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழியமைத்துக் கொடுக்கலாம். இவையெல்லாம் பா.ஜ.கவிற்கும் தெரியும். அதனால்தான் முடிந்தால் எங்களை தடை செய்து பார் என்று சவால் விடுகிறது.
source: http://www.vinavu.com/2013/01/28/congress-will-not-ban-rss-bjp/
0 கருத்துரைகள்:
Post a Comment