கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பின்னரும் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு ,பலாத்கார முயற்சி போன்றவை தலைநகர் டில்லியில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி நள்ளிரவில் தனது ஆண் நண்பருடன் பஸ்சில் வந்து கொண்டிருந்த மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் வன்முறை கும்பலால் கற்பழிக்கப்பட்டு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பபட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ல் மரணமடைந்தார். இதனையடுத்து தலைநகர் டில்லியில் இது வரையில் வரலாறு காணாத அளவில் வயது வித்தியாசமின்றி , அரசியல் கட்சிகளை தவிர்த்த மக்கள் போராட்டம் வெடித்தது. மக்களை சமாதானப்படுத்த வந்த டில்லி முதல்வர் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு போராட்டம் தொடர்ந்து நீடித்தது. மக்களின் புரட்சியை கண்ட மத்திய அரசு அவசர அவசரமாக கற்பழிப்புக்கு எதிரான சட்டத்தை மாற்றியமைத்து நடைமுறைக்கு கொண்டு வர பரிசீலனை செய்துள்ளது. அதே போல் ஒவ்வொரு மாநில அரசும் பாலியல் குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் சட்டங்களை நிறைவேற்ற துவங்கியது.
மேற்கண்ட மாணவியின் இறப்பு சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் தலைநகர் டில்லியில் 45 கற்பழிப்பு வழக்குகள் மற்றும் 75 பலாத்கார வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 26 வழக்குகளை தவிர்த்து பெரும்பாலானவை குடும்ப நண்பர்கள் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. .
தலைநகர் டில்லிக்குட்பட்ட பகுதிகளான கோவிந்தபுரி 21, சங்கம் விஹார் 17, மற்றும் ஷாகர்பூர் போலீஸ் நிலையங்களில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011-ல் கற்பழிப்பு வழக்கு 572-ல் இருந்து 2012-ம் ஆண்டில் 706 ஆகவும், பலாத்கார முயற்சி வழக்கு 2011-ல் 657-ல் இருந்து 2012-ம் ஆண்டில் 727 ஆகவும் அதிகரித்து காணப்படுகிறது. இவற்றில் 94 சதவீத வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருதாககூறினார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கவும்,அவர்களுக்கு தேவையான ரோந்து வாகனம், மோட்டார்சைக்கிள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண் போலீசார் சாதாரண உடை அணிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என கூறினார்.
ஒரு லட்சம் மக்கள் தொகை கணக்கின் படி கடந்த 2005-ம்ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை 4.42 லிருந்து 2012-ம் ஆண்டில் 4.15 ஆக குறைந்துள்ளதாக போலீஸ் புள்ளிவிவர கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள்ளான புள்ளி விவர ஆய்வின் படி நாள் ஒன்றுக்கு மூன்று கற்பழிப்பு சம்பவங்களும், ஐந்து பாலத்கார முயற்சி சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.
0 கருத்துரைகள்:
Post a Comment