டமஸ்கஸ்: அண்மையில் பஷர் அல் ஆஸாத் அரசுக்கு எதிரான சிரியா மக்களின் எழுச்சியை ஆதரித்தமைக்காக பலஸ்தீன் மக்கள் தலைவர் காலித் மிஷேலை சிரியா, ஈரானிய அரச ஊடகங்கள் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தன.
இதுகுறித்து, "ஒருங்கிணைப்பு மற்றும் மீளுருவாக்க"த்துக்கான மொரோக்கோ அமைப்பின் தலைவர் முஹம்மத் அல் ஹம்தூனி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
"காலித் மிஷேல் ஒரு மக்கள் தலைவர். ஒரு சமூகப் போராளி. பலஸ்தீன் போராட்டத்துக்கு சிரியா அரசாங்கமும் அதன் மக்களும் அளித்துவந்த மகத்தான ஆதரவை அவர் ஒருபோதும் மறக்கவோ மறுதலிக்கவோ இல்லை. அவர் இதற்கு முன் சிரியா அரசாங்கத்துக்குத் தனது பூரண ஆதரவை வழங்கியே வந்துள்ளார்.
ஆனால், அந்த அரசாங்கம் எப்போது தன்னுடைய சொந்த மக்களையே ஈவிரக்கமின்றிக் கொன்றுகுவிக்கத் தொடங்கியதோ, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தன்னுடைய இரும்புக்கரங்களால் அடக்கியொடுக்க முன்வந்ததோ அப்போதிருந்து அவர் சிரியா மக்களின் பக்கம் நிற்கலானார். அவர் தன் வாழ்க்கையில் நம்பி ஏற்றுப் பின்பற்றும் விழுமியங்களுக்கு அமைய, ஒரு நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் சுயகௌரவத்தோடும் வாழ்வதன் பொருட்டு போராட்டம் நடத்தினால், அந்த மக்கள் சார்பில் குரல்கொடுப்பதே நியாயம். அவர் அதைத்தான் செய்துள்ளார். அதனைக் கீழ்த்தரமாக விமர்சிப்பது எந்தவித ஊடகத் தர்மத்துக்கும் அப்பாற்பட்டதாகும்" என்று முஹம்மத் அல் ஹம்தூனி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான நீண்டகாலப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலஸ்தீன் மக்கள் தலைவர் ஒருவர், தன்னுடைய சொந்தக் குடிமக்களை அடக்கியொடுக்கிக் கொன்றுகுவிக்கும் ஈவிரக்கமற்ற சர்வாதிகார அரசாங்கம் ஒன்றோடு சமரசம் செய்துகொண்டு அதற்கு ஆதரவளிப்பார் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையானது. எனவே, காலித் மிஷேல் சிரியா மக்கள் போராட்டம் குறித்து எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதே. அதைத் தவறு என்று விமர்சிப்பது அறிவுக்குப் புறம்பானதாகும்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.


0 கருத்துரைகள்:
Post a Comment