புதுடெல்லி:ஐந்து மாதங்களுக்கு முன்பு ரியாதில் கைது செய்யப்பட்ட பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூது இன்னும் காவலில் இருக்க, இப்பொழுது ஒரு கர்நாடக மருத்துவரை சவூதி அரேபியா போலீஸ் கைது செய்துள்ளது. உஸ்மான் கனி என்ற அந்த மருத்துவர் ரியாதில் நேஷனல் கார்டு மருத்துவமனையில் பணி புரிகிறார்.
கர்நாடகா போலீஸ்தான் தன் மகன் கைதாவதற்குக் காரணம் என்று மருத்துவர் உஸ்மான் கனியின் தாயார் ஃபாத்திமா கான் கூறியுள்ளார். இந்தச் செய்தி Newzfirst.com. என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தன் மகன் உஸ்மான் கனியை சவூதி போலீசார் எந்தக் காரணமும் சொல்லாமல் கைது செய்ததாக ஃபாத்திமா கான் கூறினார் என்று அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஃபாத்திமா கான் கர்நாடகாவின் தர்வாட் மாவட்டத்தைச் சார்ந்தவர். ஃபாத்திமா கானின் கணவர் 15 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
கடந்த மே 13 அன்று பீகாரின் தர்பங்காவைச் சார்ந்த ஃபஸீஹ் மஹ்மூத் என்னும் பொறியாளர் சவூதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சவூதி அரேபியாவில் அல் ஜுபைலிலுள்ள அவரது வீட்டில் வைத்து அவரின் மனைவி நிகாத் பர்வீனின் கண்ணெதிரே அவர் கைது செய்யப்பட்டார். இந்திய அரசும், காவல்துறை வட்டாரமும் முதலில் ஃபஸீஹ் மஹ்மூதின் கைது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நாடகம் ஆடின.
ஒன்றரை மாதங்கள் கழித்து ஃபஸீஹின் மனைவி பர்வீன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்குப் பின்தான் (Habeas Corpus) அவர் கஸ்டடியில் இருக்கிறார் என்று இந்திய காவல்துறை ஒப்புக்கொண்டது. ஃபஸீஹ் இன்னும் சவூதி காவலில்தான் உள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment