புதுடெல்லி:தனிப்பட்ட நபர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வழக்குகளுக்கு உயர்நீதிமன்றங்கள் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.
இப்படிப்பட்ட வழக்குகளில் வேகமாக முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்றும், விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களுக்கு நீதிமன்றங்கள் எடுக்கும் முடிவுகள் முறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் பி. சதாசிவம், ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது.
கள்ளக் கடத்தலைத் தடுப்பது சம்பந்தமாக வருமானத்துறை நுண்ணறிவு இயக்ககம் (Directorate of Revenue Intelligence) விசாரணைக் கைதியாக சிறையில் அடைத்ததற்கெதிராக பாபி தேவஸ்ஸி சுள்ளி என்பர் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம். இந்தியாவுக்கு டீசலை சட்ட விரோதமாகக் கடத்தியதாகக் குற்றம் சாட்டி 2005ம் ஆண்டு மார்ச் மாதம் பாபியை மும்பை போலீசார் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் இந்தக் குற்றத்தைச் செய்யலாம் என்பதால் இவரை விசாரணைச் சிறையில் வைக்கவேண்டும் என்று 2005 மே மாதம் வருமானத்துறை நுண்ணறிவு இயக்ககம் உத்தரவிட்டது. இதற்கெதிராக பாபி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment