புதுடெல்லி:சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் ஆட்சி நிர்வாக கட்டமைப்புகளும், போலீசும் பலவீனமாக இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மாநில காவல்துறை தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் பிரதமர்.
அப்பொழுது அவர் கூறியது:
நமது நாட்டில் உள்ள இன, மத, கலாச்சார பன்முகத்தன்மைதான் நமது பலத்துக்கான ஆதார சக்தியாக, நாட்டிற்கு உயிர்துடிப்பாக அமைந்துள்ளது. எனவே பல்வேறு பிரிவு சமூகத்தினரிடையே நூலிழையாக உள்ள நல்லிணக்கத்தை வலுப்படுத்த தேவையான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.
மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு சமுதாயங்கள் இடையே உருவாகும் பிரிவினையை துவக்கத்திலேயே தடுக்கும் விதத்தில் போலீஸ் படையை நவீனப்படுத்த வேண்டும். சூழ்நிலைகள் மோசமாகும் முன்பு பிரச்சனையை உருவாக்கும் நபர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதிலும், சமூகங்கள் இடையே ஒத்துழைப்பை உறுதிச்செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். வன்முறையாளர்களையும், சகிப்புத்தன்மையற்றவர்களையும் தனிமைப்படுத்த சமுதாயங்களின் ஒத்துழைப்பை பெறவேண்டும். இதற்காக போலீசாருக்கு பயிற்சி அளிக்கவேண்டும்.
மிகச்சிறந்த சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. அரசின் இத்திட்டத்தில் தனியாரும் இணைய வேண்டும். நமது பொருளாதாரமும், உள்கட்டமைப்பு வசதிகளும் கணினி நெட்வொர்க்குகள் மற்றும் இணையதளத்தைச் சார்ந்திருப்பதால், சைபர் குற்றங்களால் நம் நாடு பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
இதேபோல், சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரங்களை முறியடிக்கும் முறை ஒன்றை ஏற்படுத்துமாறும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.
நாட்டில் மத ரீதியான பதற்றத்தை ஏற்படுத்த தொகுப்பு எஸ்.எம்.எஸ்.களும், சமூக வலைத்தளங்களும் பயன்படுத்தப்படுவது புதிய சவாலாகும். சமீபத்தில் வடமாநிலத்தவர் குறித்து மேற்கொள்ளப்பட்ட இவ்வகைப் பிரசாரம் மூலம் நமக்கு ஏற்பட்ட சவால் இதுவாகும். இந்தப் புதிய ஊடகங்களை விஷமிகள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர்? என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நக்ஸலைட்டுகள் தங்களது எண்ணிக்கையை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்துகொள்கிற ஆற்றல், அவர்களின் தீவிரவாத சக்தியை பெருக்கி உள்ளது. நக்ஸலைட்டுகளால் ஏழு மாநிலங்கள் பாதித்துள்ளன.இது கவலை அளிப்பதாக உள்ளது.ஐ.இ.டியை(நவீன குண்டுவெடிப்பு கருவிகள்) பயன்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதிலும், மாநிலங்களுக்கு இடையேயான எல்லையை நக்ஸலைட்டுகள் பயன்படுத்துவதை தடுப்பதிலும் நமது துணை ராணுவத்தினர் முக்கிய பங்காற்றவேண்டும்.
கஷ்மீரில் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கவனத்திற்கு வருகின்றன. கடல் வழியாக ஊருடுவும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. தீவிரவாத தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.” இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment