புதுடெல்லி:முஸ்லிம் இளைஞர்களையும், அமைப்புகளையும் தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் சித்தரிப்பதன் மூலம் பழங்குடியின-தலித்-பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்கு தடைபோட உயர்ஜாதியினர் நடத்தும் முயற்சியாகும் என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ்பஸ்வான் கூறினார். டெல்லியில் இந்தியன் இஸ்லாமிக் கல்சுரல் செண்டரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஏற்பாடுச் செய்யபட்ட ஈத் மிலன் (பெருநாள் சந்திப்பு) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர்.
மேலும் அவர் கூறியது: “இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு பிற்படுத்தப்பட்ட-தலித் மக்களின் நிலைமை இங்கு நிலவிய சாதிக் கொடுமைகளால் மிகவும் துயரமானதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களை, முஸ்லிம்கள் தங்களது வீடுகளுக்கும், மஸ்ஜிதுகளுக்கும் அழைத்துச்சென்று சமூக ஐக்கியத்தை கட்டியெழுப்பினார்கள். இதற்கு எதிரான உயர் ஜாதியினரின் சூழ்ச்சியே முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாக சித்தரிப்பதன் வாயிலாக தொடர்கிறது.” இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர்இ.எம்.அப்துல்ரஹ்மான் ஈத்மிலன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்த அவர், பழங்குடியினர், தலித்துகள், முஸ்லிம்களை சக்திப்படுத்துதல் என்பது தேசிய கடமை என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் தங்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை மறந்து புதியதொரு இந்தியாவுக்காக ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் உரையாற்றுகையில் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப், லோக் ஜனசக்தி கட்சி தேசியப் பொதுச் செயலாளர் அப்துல் காலிப், ஜாமியா நகர் எம்.எல்.ஏ ஆஸிஃப் முஹம்மது கான், ஆல் இந்தியா எஸ்.சி, எஸ்.டி பெடரேசன் தலைவர் உதித்ராஜ், இந்தியன் இஸ்லாஹி மூவ்மெண்ட் தலைவர் மவ்லானா அப்துல் வஹ்ஹாப் கில்ஜி, டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.சாய்பாபா, முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் டாக்டர்.பஷீர் அஹ்மத் கான், முஸ்லிம் பொலிட்டிக்கல் கவுன்சில்ஆஃப் இந்தியாவின் தலைவர் டாக்டர்.தஸ்லீம் ரஹ்மானி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லி மாநில தலைவர் கலீமுல்லாஹ் சித்தீகி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வெல்ஃபெயர் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் முஸ்தபா ஃபாரூக்கி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்து செயலாளர் மவ்லானா முஹம்மது அஹ்மத்,சமாஜ்வாதிக் கட்சி தலைவர் அஷு மாலிக், எல்.ஜே.பி தலைவர் அமானுல்லாஹ் கான்,பீஸ் பார்டி ஆஃப் இந்தியாவின் முன்னாள் பொதுச்செயலாளர் யாமின் சவுதரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment