Sunday, September 9, 2012

அஸ்ஸாம்:நிவாரண பணிகளை தீவிரப்படுத்துகிறது ரிஹாப்!

Rehab India Foundation
புதுடெல்லி:அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கான நிவாரண பணிகளை தீவிரப்படுத்த ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் முடிவுச் செய்துள்ளது.
நிலைமைகள் குறித்து ஆராய, டெல்லி ரிஹாப் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் அஸ்ஸாம் மாநில ரிஹாப் நிவாரணப் பணி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கு ரிஹாப் தலைவர் இ.அபூபக்கர் தலைமை வகித்தார்.
சொந்த கிராமங்களுக்கு பாதுகாப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் திரும்புவதே அகதிகள் பிரச்சனையின் இறுதி தீர்வு என்று இ.அபூபக்கர் கூறினார். ரிஹாப் போன்ற அரசு சாரா நிறுவனத்திற்கு இப்பிரச்சனை தகுதிக்கு அப்பால் உள்ள சவால் ஆகும். ஆனால், பிரச்சனை தீரும் வரை ரிஹாப் அவசர நிவாரண பணிகளை தொடரும். பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பினால் மறுவாழ்வுக்கான திட்டங்களை அமல்படுத்துவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அவசரமாகவும் அதேவேளையில் நீண்டகால அடிப்படையிலும் அஸ்ஸாமில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. ரிஹாப் மேற்கொண்ட சர்வேயின் அடிப்படையில் 4 லட்சம் மக்கள் அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் 4ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான மக்கள் மட்டுமே சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர். 17 பேர் அகதிகள் முகாம்களில் வைத்து மரணமடைந்துள்ளனர். முகாம்களில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கர்ப்பிணிகள் உள்ளனர். தொலைதூரங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் அதிகமான துயரங்களை அனுபவிக்கின்றார்கள். இவர்களுக்கு போதுமான சிகிட்சை வழங்கப்படவில்லை.
முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு ஆடைகள், கழிப்பறை வசதிகள் தேவைப்படுகின்றன. அசுத்தமான சூழல் அவர்களின் வாழ்க்கையை சிரமத்திற்குரியதாக மாற்றிவிட்டது. இவ்விடங்களில் மருத்துவர்கள், பாரா மெடிக்கல் பணியாளர்களின் சேவைகள் தேவை. மேற்குவங்காளத்தைச் சார்ந்த ஜூனியர் மருத்துவர்களின் சேவையை ரிஹாப் பயன்படுத்துகிறது.
சமூகத்திற்கு சேவையாற்ற இந்தியாவில் உள்ள மருத்துவர்களுக்கு ரிஹாப் அழைப்பு விடுத்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza