டெஹ்ரான்:அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு ஈரான் தலைமை தாங்குவதை இஸ்ரேலால் சகித்துக்கொள்ள இயலவில்லை என்று ஈரான் வர்த்தக அமைச்சர் மெஹ்தி கஸன்பாரி தெரிவித்துள்ளார். உலக தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்கு தலைமை தாங்குவதன் மூலம் ஈரான் அடையப்போகும் ஆதாயங்கள் குறித்து சியோனிஷ அரசு கவலை அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
இம்மாதம் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸி, இந்திய பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சர்வதேச அளவில் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை பங்கேற்காமல் செய்ய அமெரிக்காவின் தலைமையில் முயற்சிகள் நடந்துவருகின்றன.
அணுசக்தியின் பெயரால் தடைகளை சந்தித்துவரும் ஈரான், அணிசேரா நாடுகளின் மாநாட்டை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தும் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாகும்.
உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளதை அமெரிக்கா பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment