மும்பை:அஸ்ஸாம் மற்றும் மியான்மர் கலவரத்தை கண்டித்து மும்பையில் நடந்த போராட்டத்தின் போது உருவான வன்முறையில் 2 பேர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் நடந்துள்ள சதித்திட்டத்தை வெளிக்கொணர சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸ்ஸாம், மியான்மர் கலவரத்தை கண்டித்து மும்பை ஆஸாத் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 22 வயதான அல்தாஃப் ஷேக், முஹம்மது உமர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மைதானத்தின் வெளியே சிலர் பீதியை கிளப்பிவிட்டதாக நேற்று முன்தினம் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
அமைதியாக துவங்கிய போராட்டத்தின் இறுதியில்தான் வன்முறை உருவானது. மைதானத்திற்கு வெளியே சிலர் பீதியை கிளப்பியதே மக்கள் கூட்டம் கலைய காரணமானது. பீதியை கிளப்ப சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியது:
போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்தான் முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சந்தேகிப்பதாக முஸ்லிம் தலைவர்கள் கூறுகின்றனர். இதர அமைப்புகள் போராட்டம் நடத்தும் பொழுது துப்பாக்கிச்சூடு நடத்தாத போலீஸ், முஸ்லிம்கள் மீது மட்டும் துப்பாக்கி சூடு நடத்த எவ்வித தயக்கத்தையும் காண்பிப்பதில்லை. போலீஸாருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது வருந்தத்தக்கது.
போராட்டத்தில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கையை குறித்து முன்னரே நிர்ணயிக்க இயலாதது உளவுத்துறையின் வீழ்ச்சியாகும். அதிகமானோர் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என அரசு நிர்வாகத்திற்கு தகவல் அளித்திருந்தோம். ஆனால், மக்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. மைதானத்தின் பெரிய பகுதியை மிகவும் தாமதமாகவே போலீஸார் திறந்துவிட்டனர். அதுவரை மக்கள் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்தனர். இதுவும் பீதி பரவ காரணமானது. அமைதியை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து முயலவேண்டும். இவ்வாறு முஸ்லிம் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அசோசியேசன் ஃபார் முஸ்லிம் ஃப்ரஃபசன்ஸ் தலைவர் ஆமிர் இத்ரீஸி, உலமா அசோசியேசன் ஸய்யித் ஹாஃபிஸ் அத்தார் அலி, ஜிஸ்தி ஹிந்துஸ்தானி மஸ்ஜிதின் மவ்லானா அப்துல் ஜப்பார் ஆஸ்மி, இந்தியன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் தலைவர் ஃபரீத் கான், ரைட் வே பொதுச்செயலாளர் ஸஈத் கான், மில்லி கவுன்சில் மும்பை தலைவர் ராஷித் அஸீம், ஹிந்துத்துஸ்தான் பத்திரிகை எடிட்டர் ஸர்ஃப்ராஸ் ஆர்ஸு, அலீமி மூவ்மெண்ட் தலைவர் மவ்லானா இர்ஃபான் அலீமி, மவ்லானா கமர் ரஸா அஷ்ரஃபி, மவ்லானா அமானுல்லாஹ் ரஸா ஆகியோர் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment