ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி 1966ம் ஆண்டு.
இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்கு மிக முக்கியமான தினம். மொசாத்தின் தலைவர் அமீட் பேயர் தாமே நேரடியாக தேர்ந்தெடுத்த தினம் அது. எதற்காக? விமானம் ஒன்றை கடத்துவதற்காக!
அன்றைய தினத்தில் மிக்-21 ரக விமானம் ஒன்று மொசாத்தின் திட்டமிட்டபடி ஈராக்கிலிருந்து இஸ்ரேல்வரை கடத்தப்பட வேண்டும். விமானம் ஈராக் நாட்டு விமானப் படைக்கு சொந்தமானது.
மொசாத் சுமார் 8 மாதங்களாக போட்ட திட்டம் இது. ஈராக் விமானப் படையின் விமானி ஒருவரை அணுகி, அவரை வழிக்கு கொண்டு வந்திருந்தது மொசாத். (அதற்காக அனுப்பப் பட்டவர் ஒரு அழகிய பெண்)
ஈராக்கிய விமானிகள் பயிற்சிக்காக மிக்-21 போர் விமானங்களில் பறந்து ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு இறங்குவது வழக்கம். குறிப்பிட்ட விமானி பயிற்சிக்காக பறக்கும்போது, விமானத்தை அப்படியே ஈராக்குக்கு வெளியே கொண்டுபோய் இஸ்ரேலில் தரையிறக்க வேண்டும் என்பதே திட்டம்.
அதிலும் சின்னதாக தில்லுமுல்லு ஒன்று இருந்தது.
ஈராக் விமானியை வழிக்கு கொண்டுவந்த இளம்பெண், தம்மை சி.ஐ.ஏ.-யின் ஆள் என்று கூறியிருந்தார். “சி.ஐ.ஏ., ஈராக்கின் போர் விமானம் ஒன்றை கடத்த விரும்புகிறது” என்பதே ஈராக் விமானிக்கு கூறப்பட்ட கதைச் சுருக்கம். ஆனால், உண்மையில் அமெரிக்க பிரஜையான அந்த பெண், மொசாத் ஏஜென்ட்.
ஈராக்கியர்களுக்கு ‘இஸ்ரேல் எதிர்ப்பு’ ரத்தத்திலேயே கலந்து உள்ளது. அதனால், விமானத்தை இஸ்ரேலுக்காக கடத்த வேண்டும் என்று சொன்னால், எந்தவொரு ஈராக்கிய விமானியும் முன்வர மாட்டார். எனவே, சி.ஐ.ஏ.-யின் பெயரை உபயோகித்துக் கொண்டது மொசாத்.
இவர்கள் வழிக்கு கொண்டுவந்திருந்த ஈராக்கிய விமானியின் பெயர் முனீர் ரெட்ஃபா.
திட்டம் என்ன?
விமானம் கடத்தப்பட வேண்டிய தினத்துக்கு முதல்நாள் இரவு, முனீரின் குடும்பத்தினரை ஈராக்கில் வைத்து சி.ஐ.ஏ. (என்று சொல்லப்பட்ட மொசாத்) பொறுப்பேற்றுக் கொள்ளும். இரவோடு இரவாக அவர்கள் ஈராக்கில் இருந்து ‘எப்படியோ’ வெளியே கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் வெளியேறுவது, பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு கூட தெரியவராது.
முனீர் மறுநாள் வழமைபோல ஈராக்கிய விமானப்படை தளத்துக்கு பணிக்கு செல்ல வேண்டியது. பயிற்சிக்காக விமானத்தில் ஏறி பறக்க வேண்டியது. விமானம் ஈராக் வான் எல்லைக்கு வெளியே வந்ததும், எங்கே தரையிறக்க வேண்டும் என்று விமானத்தின் ரேடியோவில் தகவல் வரும்.
தரையிறங்கும் இடத்தில் மற்றொரு விமானம் காத்திருக்கும். முதல்நாள் இரவு ஈராக்கில் இருந்து வெளியேறிய குடும்பத்தினர் அதில் இருப்பார்கள். விமானம் நேரே அமெரிக்கா செல்லும். அங்கே வசிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும்.
ஈராக்கை விட்டு யாரும் வெளியேற அனுமதிக்கப்படாத நாட்களில், இந்த ஏற்பாடு முனீருக்கு பிடித்திருந்தது. ஈராக்குக்கு உள்ளே சர்வாதிகார ஆட்சி மற்றும் அதீதமான கட்டுப்பாடுகள் பிடிக்காத காரணத்தால், அங்கிருந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த முனீர், இதற்கு சம்மதித்திருந்தார்.
திட்டப்படி, முதல்நாள் இரவு சி.ஐ.ஏ. ஏஜென்டுகள் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட இருவர் வந்து முனீரின் குடும்பத்தினரை வேன் ஒன்றில் அழைத்துச் சென்றிருந்தனர். மறுநாள் காலை, வழமையாக பணிக்குச் செல்லும் நேரத்தில் வீட்டை விட்டு கிளம்பினார் முனீர்.
கிளம்பும்போது, இந்த வீட்டுக்கு மறுபடியும் வரப்போவதில்லை என்று நினைத்துக் கொண்டு, கடைசித் தடவையாக வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, புறப்பட்டார்.
விமானி முனீர் விமானப்படைத் தளத்துக்குள் நுழைந்தபோது எதுவும் அசாதாரணமாகத் தென்படவில்லை. அவரது குடும்பத்தினர் அனைவரும் ஈராக்கைவிட்டுத் தப்பிச் சென்ற விஷயம் இன்னமும் ஈராக் பாதுகாப்புப் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை.
ஆனால், எந்த நிமிடமும் அது தெரியவரலாம்.
தெரிந்து விட்டால் முனீர் மிக்-21 விமானத்தில் ஏறுவதற்கு முன்னரே கைது செய்யப்படுவார். தொடர்ந்து சித்திரவதை காத்திருக்கும். இறுதியில் உயிரை விட வேண்டியிருக்கும்.
முனீரால் விமானத்தை கடத்த முடிந்ததா?
இன்ஷா அல்லாஹ் தொடரும்...!
நன்றி:விறுவிறுப்பு.
2 கருத்துரைகள்:
வரலாற்றை தொடர்கதை போல கூறினால் எப்படி???
சகோ. இது வரலாறு அல்ல.உண்மை சம்பவம். எனினும் இது அனைத்தையும் ஒரே பதிப்பில் வெளியிட்டால் படிப்பதற்கு ஆர்வம் இருக்காது. எனவே தான் பகுதி பகுதியாக பிரித்து வெளியிட்டுள்ளோம். ஆனால், இந்த தொடர் முழுவதும் எமது தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுவிட்டது. உங்களது ஆதரவிற்கு நன்றி,,,,,,,,,,,!
Post a Comment