Wednesday, December 7, 2011

கஷ்மீரில் முஹர்ரம் ஊர்வலத்திற்கு தடை: உ.பியிலும், பீகாரிலும் மோதல்

05_TH_CURFEW_855563f
ஸ்ரீநகர்:கஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் நடத்தும் முஹர்ரம் ஊர்வலத்திற்கு அரசு தடைவிதித்தது. முஹர்ரம் ஊர்வலத்தை தடுப்பதற்காக ஸ்ரீநகரின் பல பகுதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.

நகரத்தின் வர்த்தக பகுதியான லால் சவுக்கில் அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நடந்து செல்வோருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. லால் சவுக், மெளலானா ஆஸாத் சாலை, ரெசிடன்சி சாலை ஆகிய இடங்களில் அனைத்து கடைகளும், வியாபார நிறுவனங்களும் மூடிக் கிடந்தன. நதியில் படகு மூலமாக மக்கள் லால்சவுக்கில் வருவதை தடுக்க மத்திய படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நேற்று முன் தினம் ஜஹாங்கீர் சவுக்கில் முஹர்ரம் ஊர்வலத்தை போலீஸ் தடுத்ததை தொடர்ந்து நடந்த மோதலில் போலீஸார் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

1990-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீநகரில் முஹர்ரம் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் நடந்த முஹர்ரம் ஊர்வலத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. இதில் 30 பேருக்கு காயமேற்பட்டது. பீகாரில் கயா மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலை கட்டுப்படுத்த போலீஸ் வானத்தை நோக்கி சுட்டது. ஆறு போலீசார் உள்பட 21 பேருக்கு காயம் ஏற்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza