புதுடெல்லி:நாட்டின் அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் பாதுகாப்பை குறித்து மதிப்பீடுச்செய்ய தங்களால் இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கான நிபுணத்துவம் நீதிமன்றத்திற்கு இல்லை ஆனால், அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடுச்செய்ய சுதந்திர குழுவை உருவாக்குவது குறித்த மனுவில் விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் இதனை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை பரிசோதிப்பதற்கு சுதந்திரமான குழுவை உருவாக்க உத்தரவிட வேண்டும் என கோரி சமூக ஆர்வலர்கள் தொடுத்த பொது நலன் வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. இக்கோரிக்கையை முன்வைத்து அதிகாரிகளை அணுகியிருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி கபாடியா மனுதாரர்களிடம் கூறினார்.
அணுசக்தி நிலையங்கள் பல வருடங்கள் பணி புரிந்து நிர்மாணிக்கப்பட்டதாகும். ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறான கட்டமைப்பு உள்ளது. இவற்றை பரிசோதிக்க நீதிமன்றத்திற்கு தகுதி இல்லை என பெஞ்ச் சுட்டிக்காட்டியது.
பொது நல மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயத்தை முன்வைத்து பல தடவை பிரதமருக்கு கடிதம் எழுதியபோதும் பதில் இல்லை என மனுதாரர்களுக்காக வாதாடிய பிரசாந்த் பூஷண் வாதிட்டார். ஆனால், பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை நீதிமன்றம் கோரிய பொழுது அதனை தாக்கல் செய்ய இயலவில்லை. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்தது.
அணுசக்தி நிலையங்கள் தொடர்பான விவகாரங்களை குறித்து அந்தந்த மாநில நீதிமன்றங்களை அணுகவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சுதந்திர குழு அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை பரிசோதனைச் செய்யும் வரை அந்நிலையங்களின் பணிகளை நிறுத்தி வைக்கவேண்டுமென மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னாள் கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன், முன்னாள் கடற்படை தலைமை தளபதி எல்.ராம்தாஸ், முன்னாள் தேர்தல் கமிஷனர் எ.என்.கோபாலசுவாமி, பிரதமரின் முன்னாள் செயலாளர் கெ.ஆர்.வேணுகோபால் ஆகியோர் உள்பட பிரமுகர்கள் இப்பொதுநல வழக்கை தொடுத்திருந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment