Monday, September 19, 2011

சிக்கிம் மற்றும் வடமாநில பூகம்பத்திற்கு 18 பேர் பலி

imagesCAZICF7G
புதுடெல்லி:சிக்கிம் மற்றும் நேபாள எல்லைப் பகுதியை மையமாக கொண்டு தாக்கிய கடும் நிலநடுக்கத்திற்கு 18 பேர் பலியாகியுள்ளனர். இதில் சிக்கிமில் 13 பேரும், நேபாளத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று காலை 6.11 மணியளவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இருந்தது. இதன் பாதிப்பை வட இந்தியா மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் உணர்ந்தன. மேலும் நேபாளம், வங்கதேசம், பூட்டான் ஆகிய நாடுகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இந்த பூகம்பத்திற்கு சிக்கிமில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பீகாரில் ஏழு வயது சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். லேட்டகார் என்ற பகுதிதான் பூகம்பத்தால் பெரும் சேதத்தை சந்தித்தது. அங்கு வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். சாலைகள் பெருமளவில் விரிசல் கண்டன.

மேற்கு வங்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காத்மாண்டுவைச் சேர்ந்தவர்கள். அங்கு இங்கிலாந்து தூதரக அலுவலக கட்டடம் இடிந்து விழுந்தது. ஒரு கார் நசுங்கி சேதமடைந்தது.

லக்னோ, பாட்னா, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

சிக்கிமில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5.7, 5.1, 4.6 என்ற ரிக்டர் அளவிலான மூன்று ஆப்டர்ஷாக் எனப்படும் தொடர் நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

சிக்கிம் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல கட்டடங்கள் இடிந்து விட்டன. சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழக கட்டடமும் இடிந்துள்ளது. சட்டசபை கட்டடமும் விரிசல் கண்டுள்ளது.

சிக்கிமில் நிலை கொண்டுள்ள ராணுவத்திற்குத்தான் பூகம்பத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு சிக்கிமில் உள்ள ராணுவக் கட்டடம் முழுமையாக சேதமடைந்தது. ஒரு ராணுவப் பஸ்ஸையு்ம், பல வாகனங்களையும் காணவில்லை.

தேசிய பேரிடர் துயர் தீர்ப்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்திய விமானப்படையின் ஐந்து விமானங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ராணுவத்தினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிலிகுரி-கேங்டாக் நெடுஞ்சாலையில் 25 இடங்களில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்ய ராணுவத்தினர் தீவிரமாக முயன்றுள்ளனர்.

கேங்டாக் மற்றும் டார்ஜீலிங்கில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிக்கிமின் சில பகுதிகளில் தொலைபேசி இணைப்புகளும் செயலிழந்துள்ளன. மேற்கு வங்கத்திலும் தொலைபேசி இணைப்புகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.




0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza