ஹரித்துவார்:கங்கை நதியின் கரையில் சட்டவிரோத குவாரிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சுவாமி நிகமானந்தா மரணித்த வழக்கில் டாக்டர் மற்றும் குவாரி உரிமையாளர் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்துள்ளது.
நிகமானந்தாவிற்கு சிகிட்சையளித்த டாக்டர் பி.கே.பட்நகர் குவாரி உரிமையாளர்களுக்காக அவருக்கு மருந்து செலுத்தி நினைவிழக்கச் செய்ததாக சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. இருவர் மீதும் கொலை, சதித்திட்டம் ஆகிய குற்றங்கள் சுமத்தி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத குவாரிக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த நிகமானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹரித்துவார் மாவட்ட மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய டாக்டர்.பி.கே.பட்நகர் ஹிமாலயன் கருங்கல் குவாரி அதிபர் கணேஷ் குமாருடன் சதித்திட்டம் தீட்டி நிகமானந்தாவுக்கு மருந்தை செலுத்தியுள்ளார். இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி முதல் சுவாமி நிகமானந்தா உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்தார். ஏப்ரல் 27-ஆம் தேதி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்த சூழலில் டேராடூனில் ஹிமாலயன் இன்ஸ்ட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸிற்கு மாற்றப்பட்ட பிறகும் ஜூன் 13-ஆம் தேதி அங்கு வைத்து மரணமடைந்தார்.
நிகமானந்தாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அரசியல் கட்சிகளைச் சார்ந்தோர் உள்ளிட்டவர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து உத்தரகாண்ட் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

0 கருத்துரைகள்:
Post a Comment