Saturday, July 16, 2011

நியூஸ் இண்டர்நேசனல் சி.இ.ஒ ரபேக்கா ராஜினாமா

லண்டன்:ரூபர்ட் மர்டோக்கின் பிரிட்டன் நியூஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின் சி.இ.ஒ ரபேக்கா ப்ரூக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிறுவனத்தின் கீழ் செயல்படும் நியூஸ் ஆஃப் த வேர்ல்டின் போன் ஹேக்கிங் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து ப்ரூக்ஸிற்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மர்டோக்கிற்கு சொந்தமான பிரிட்டனிலிருந்து வெளியாகும் தி ஸன், தி டைம்ஸ், தி சண்டே டைம்ஸ், மூடப்பட்ட நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் ஆகிய பத்திரிகைகளை வெளியிடும் நிறுவனம் தான் நியூஸ் இண்டர் நேசனல். இந்நிறுவனத்தின் சி.இ.ஒ ஆக பதவி வகித்தவர் ரபேக்கா ப்ரூக்ஸ். தொலைபேசி ஒட்டு கேட்பின் வேளையில் ப்ரூக்ஸ் நியூஸ் ஆஃப் த வேர்ல்டின் எடிட்டராக இருந்தார்.

தொலைபேசி ஒட்டுகேட்பு செய்தி வெளியானதை தொடர்ந்து ப்ரூக்ஸ் மீது மக்கள் எதிர்ப்பு வலுவடைந்தது. பிரதமர் டேவிட் காமரூன் உள்ளிட்ட பிரமுகர்கள் ப்ரூக்ஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என மர்டோக்கிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நேற்றுவரை இச்சம்பவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவோ, ராஜினாமா செய்ய வேண்டும் என்றோ கோரிக்கை விடுக்காத மர்டோக், ப்ரூக்ஸிற்கு ஆதரவு அளித்து வந்தார்.

இதற்கிடையே தங்களுக்கு சொந்தமான பத்திரிகை நடத்திய தொலைபேசி ஒட்டு கேட்பு சம்பவத்திற்கு மர்டோக்கும், அவரது குடும்பத்தினரும் பிரிட்டன் அரசு மற்றும் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அறிவித்துள்ளனர். நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் சி.இ.ஒ ப்ரூக்ஸின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாகவும் மர்டோக்கின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza