Saturday, July 2, 2011

பத்மநாப சுவாமி கோவிலில் ஆபரண, நாணய புதையல்கள்-மதிப்பு 50 ஆயிரம் கோடியை தாண்டியது

tiruvandrem templeதிருவனந்தபுரம்:உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 130 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோவிலில் நான்கு தினங்களாக நடைபெறும் மதிப்பீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதையல்களின் மதிப்பு 50 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. ரகசிய அறைகளில் இருந்து விலைமதிப்பற்ற தங்கம், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியில் எடுக்கும் பணி தொடர்கிறது.

திருவாங்கூர் அரச குடும்பத்தினரின் நிர்வாகத்தில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள நான்கு ரகசிய அறைகளை திறக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரகசிய அறைகளை திறப்பதற்கு முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் நியமித்த இக்குழு, கடந்த ஜூன் 27ம் தேதி அறைகளை திறக்க துவங்கியது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாணயங்கள், மதிப்புமிக்க ரத்தினங்கள் ஆகியவற்றின் பெரும்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

536 கிலோ தங்க நாணயங்கள், 106 ராசி நாணயங்கள், மதிப்பு மிக்க ரத்தினங்கள், தங்க க்ரீடம் ஆகியன கண்டறியப்பட்டன. கிழக்கு இந்தியா கம்பெனி வெளியிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே 17 கிலோ தேறும். திருவிதாங்கூர் ஆட்சிகாலத்தின் 14 கிலோ தங்கநாணயங்களும் இதில் உள்ளன. நெப்போலியன் காலக்கட்டத்தை சார்ந்த அபூர்வமான தங்க நாணயங்கள், போர்த்துகீசியர்களின் காலக்கட்டத்தை சார்ந்த நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரத்தினங்கள் பட்டுத்துணியில் பொதியப்பட்டு இருந்தது. மாணிக்கம் மற்றும் மரகதத்திலான மாலைகளின் குவியலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் பத்மநாப கோவிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பெரும் நாணயக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சூழலில் கோவிலின் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய-மாநில புலனாய்வுத்துறைகள் அளித்த தகவலையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக கோவிலை சுற்றிலும் ஆயுதப்படை நிறுத்தப்படும். கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza