ஹல்ஹூல், பெய்ட் உம்மார் ஆகிய கிராமங்களில் பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான பெரும் நிலப்பரப்பு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையால் பலவந்தமாக அபகரிக்கப்பட்டு கர்மி ட்ஸூர் குடியேற்றம் நிறுவப்பட்டிருந்தது.
இஸ்ரேலியக் குடியேற்றங்களை விஸ்தரிக்கும் ஆக்கிரமிப்புக் கொள்கையின் விளைவால், பலஸ்தீன் நிலங்கள் மிக வேகமாகக் கபளீகரம் செய்யப்பட்டு ஸியோனிஸக் குடியேற்றங்கள் அதிகளவில் நிறுவப்பட்டு வருவதை ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கண்டித்த போதிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் அதைக் கண்டுகொள்வதேயில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை (07.06.2011) இந்தக் குடியேற்றத்தில் வசிக்கும் ஸியோனிஸத் தீவிரவாதிகளால் ஒலிவ மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த பலஸ்தீன் விளைநிலம் எரியூட்டப்பட்டுள்ளது.
ஒலிவ மரங்கள் மற்றும் கோதுமைப் பயிர் விளைந்திருந்த சுமார் 3 தூனம் (1 தூனம் = 1000 சதுர அடிகள்) பரப்புள்ள பலஸ்தீன் விளைநிலத்துக்குத் தீமூட்டிய ஸியோனிஸத் தீவிரவாதிகள், அங்கு செழித்து வளர்ந்திருந்த திராட்சைக் கொடிகள்மீது ஒருவித இரசாயனத் திராவகத்தைத் தெளித்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பற்றியெரியும் பயிர்நிலத்தைக் கண்டு, நெருப்பை அணைப்பதற்கென ஓடோடிவந்த பலஸ்தீன் விவசாயிகளை நோக்கி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்களின் இத்தகைய அடாவடிச் செயல்பாடுகள் அப்பிரதேசத்தில் அடிக்கடி இடம்பெற்றுவருகின்றன என்று தெரிவித்த உள்ளூர்வாசிகள், பலஸ்தீன் விவசாயிகளின் பொருளாதார நிலைமையைப் பலவீனமடையச் செய்வதும், தொடர்ச்சியான அச்சுறுத்தலின் மூலம் அவர்களைத் தமது சொந்த நிலங்கள் மற்றும் வீடுகளைக் கைவிட்டு வெருண்டோடச் செய்வதுமே இந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம் என்று வலியுறுத்தியுள்ளனர்.


0 கருத்துரைகள்:
Post a Comment