சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கிறது.சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திருத்த மசோதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், துறையின் செயலாளர் டி.சவீதா, தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி ஆகியோர் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் டெல்லி விரைந்துள்ளனர்.
மேல்முறையீட்டு மனு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இம்மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் இம்மனுவை விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மனித உரிமை பாதுகாப்பு மைய சென்னை கிளையின் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ், மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வி.வெங்கடேசன் ஆகியோர் சமச்சீர் கல்வி வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று `கேவியட்' மனு தாக்கல் செய்தனர்.
ஏற்கனவே, சமச்சீர் கல்வி திட்டத்தை ஆதரித்து அவர்கள் இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சமச்சீர் கல்வி வழக்கில் `கேவியட்' மனு தாக்கல் செய்திருப்பதால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது அவர்களையும் நீதிபதிகள் வழக்கில் சேர்த்துக்கொள்வார்கள்.
இதுகுறித்து, மனித உரிமை பாதுகாப்பு மைய சென்னை கிளையின் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ், `சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் என்ற முறையில், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். இதனால், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தாலும், எங்களது பதிலையும் கேட்ட பிறகுதான் பிறப்பிக்க வேண்டி இருக்கும்' என்று கூறினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment