உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா நகர விரிவாக்கத்திற்காக உத்திரப் பிரதேச அரசு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துத் தரவேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தின் போது விவசாயிகள் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சிலரை கடத்திச் சென்று சிறை வைத்தனர். இவர்களை மீட்கச் சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் யமுனா எக்ஸ்பிரஸ் செல்லும் வழியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கும் கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆக்ராவிலும் வன்முறை வெடித்தது.
ஆக்ரா அருகே உள்ள சவுகான் என்ற கிராமத்தில் நடந்த மோதலில் 4 காவலர்கள் காயமுற்றனர். அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது என சிறப்பு டிஜிபி பிரிஜ்லால் கூறியுள்ளார்.
சனிக்கிழமையன்று கொளதம புத்தர் நகர் மாவட்டத்தில் உள்ள பட்டா பர்சால் என்ற கிராமத்தில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில் ஒரு விவசாயி கொல்லப்பட்டார். இந்தப் பிரச்சனையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment