Monday, May 30, 2011

பலஸ்தீன் கிராமம் இராணுவ வலயமாக அறிவிப்பு

மேற்குக் கரையின் நப்லஸ் நகரை அடுத்துள்ள ஈராக் பூரின் எனும் பலஸ்தீன் கிராமத்தை, 'மூடிய இராணுவ வலய'மாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் அறிவித்துள்ளது. இக்கிராமத்தை அடுத்து சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலியப் பிரிவினைச் சுவருக்கு எதிராக வாரந்தோறும் ஊர்மக்களால் மேற்கொள்ளப்படும் அமைதியான எதிர்ப்புப் பேரணியில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்வதைத் தடுக்குமுகமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.

ஈராக் பூரின் மேயர் அப்துல் ரஹீம் குத்தூஸ் தெரிவிக்கையில், "தேடுதல் நடவடிக்கை என்ற பேரில் உள்ளூர்வாசிகளின் வீடுகளில் நுழைந்து அட்டகாசம் புரியும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், ஈராக்பூரின், டெல் ஆகிய ஊர்களின் பிரதான நுழைவாயில்களில் பிரவேசத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

'தமக்குச் சொந்தமான நிலப்பிரதேசங்களைப் பலவந்தமாகக் கைப்பற்றி இஸ்ரேலியப் பிரிவினைச் சுவர் மற்றும் யூதக் குடியேற்றங்கள் அமைப்பதையும், தாம் அடிக்கடி யூதக் குடியேற்றவாசிகளின் அடாவடித் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதை ஆக்கிரமிப்பு அரசாங்கம் கண்டும் காணாமல் இருப்பதையும் எதிர்த்து பிரதி சனிக்கிழமைதோறும் அக்கிராமவாசிகளான பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் அமைதிப் பேரணிகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணும் இத்தகைய கெடுபிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் வாக்குமூலமளிக்கையில், "பிரதான நுழைவாயில்களின் அருகே இராணுவ வாகனங்களை நிறுத்திப் பிரவேசத் தடை ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு இராணுவம், அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள வரும் ஊடகவியலாளர்களையும் பலஸ்தீன் ஆதரவாளர்களான வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களையும் தடுத்து நிறுத்துவதற்காகத் தன் துருப்பினரைத் தயார்நிலையில் வைத்திருந்ததோடு, உள்ளூர்வாசிகளின் சுதந்திரமான நடமாட்டத்தையும் தடை செய்திருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி பலஸ்தீன் கிராமங்களை அடுத்துள்ள 'ப்ராச்சா' எனும் யூத ஆக்கிரமிப்புக் குடியேற்றவாசிகள், பலஸ்தீனர்களை அச்சுறுத்தி அவர்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பலவந்தமாக அபகரித்துக் கொள்ளும் நோக்கிலும், அருகில் உள்ள கிணற்றில் இருந்து உள்ளூர்வாசிகள் குடிநீர் அள்ளுவதைத் தடுக்குமுகமாகவும் ஆயுதபாணிகளாக அடிக்கடி இக்கிராமங்களுக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 இதனால், பலஸ்தீனர்களான கிராமவாசிகள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனினும், இவர்களைத் தடுத்துநிறுத்தவோ அப்பாவிப் பலஸ்தீன் மக்களைப் பாதுகாக்கவோ இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு, உள்ளூர்வாசிகளான பலஸ்தீனர்களை அடக்கியொடுக்கும் நடவடிக்கைகளிலேயே தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza