புதுவலசையில் 6.7.2011 வெள்ளிகிழமை அன்று அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ பள்ளியில் ஜும்ஆ பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் சீனி முகம்மது முஅத்தீன் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் உண்ணதங்களை பற்றி உரையாற்றினார்கள்.
இறைவன் தனது வல்லமையால் உருவாக்கிய எண்ணற்ற படைப்புகளில் மனித சமுதாயமும் ஒன்று.அச்சமூகத்தை மட்டும் மிகப்பெரும் ஆற்றல்களோடு படைத்திருக்கிறான்.
கிறிஸ்துவம்,யூத குலம் போன்றவைகள் உலகிலேயே மிகப்பெரிய சமுதாயமாக கருதப்படுகிறது. ஆனால் சிறிய சமுதாயமாக கருதப்படும் இஸ்லாம் மார்க்கம் நற்பண்புகளிலும்,மார்க்கப்பற்றிலும் சிறந்து விளங்குகின்றது.
மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதை அல்லாஹ் விரும்பவில்லை 1400 வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு அடிமை காலம் இருந்தது. எனவே தான் இறைவன் மனிதர்களுக்கு நல்லறிவை வழங்குவதற்காக எண்ணற்ற நபிமார்களை மனிதர்களிடமிருந்தே உருவாக்கினான்.
இறுதி தூதரான முகம்மது நபி(ஸல்) அவர்கள் அக்காலத்தில் கொடுமை என கருதிய ஒரு விசயம் என்னவெனில் பெண் பிள்ளைகளை கொலை செய்வது. எனவே "உங்கள் பெண் குழந்தைகளை அழிக்காதீர்கள்" என்று சொல்லி சென்றார்கள். ஆனால் இன்றும் சில கிராமங்களிலும், சில நகரங்களிலும் பெண் சிசு கொலை நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இத்தகைய கொடுஞ் செயல்களை செய்பவர்கள் உண்மையான முஃமினாக இருக்க முடியாது. இறைவனின் கட்டளையும், நபி(ஸல்) அவர்களின் ஹதீதுகளையும் ஏற்று அதன் படி வாழ்பவரே சிறந்த முஃமினாவார்.
அறப்போர் புரிந்த அக்காலத்தில் ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து "நான் அறப்போர் புரிய அனுமதி தாருங்கள்" என்று கேட்க அதற்கு நபி(ஸல்)அவர்கள் "உனக்கு பெற்றோர் இருக்கின்றனரா" என்று கேட்க அம்மனிதர் "ஆம்" என்றார். நபி(ஸல்)கூறினார்கள், " அவ்வாறாயின் உங்கள் பெற்றோரை நல்ல முறையில் உபசரியுங்கள்" என்று கூறி பெற்றோரின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்கள்.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் "தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது","தந்தையின் பொருத்தத்தில் என்னுடய பொருத்தம் இருக்கிறது, தந்தையின் கோபத்தில் என்னுடைய கோபம் இருக்கிறது"என்று கூறியுள்ளான்.ஆனால் இன்றோ பெற்றோர்களை அரவணைக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து அவர்களை இரத்த கண்ணீர் வடிக்க செய்கிறார்கள் இக்கால பிள்ளைகள்.
மற்றவர்களை போல் முஸ்லிமாகிய நாம் நடந்து கொள்ள கூடாது. நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும். இறைவனை வணங்கி இறை செயல்களை செய்ய வேண்டும்.எந்த மனிதரின் உள்ளத்தில் "லா இலாஹ இல்லல்லாஹ்" எனும் கலிமா முழு மூச்சாக இருக்குமோ அம்மனிதர் சிறு தவறு செய்வதை கூட எண்ணமாட்டார். எந்த மனிதரின் உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருக்குமோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க அல்லாஹ் அருள் புரிவான் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். உலகத்தில் எந்த மூலையில் என்ன செய்தாலும் அதை அல்லாஹ் அறிகின்றான் என்பதை உணர்ந்து இறை அச்சத்துடன் நாம் செயல் பட வேண்டும். இஸ்லாம் ஒழுக்கத்தை கற்று தரும் ஒரு இனிய மார்க்கம். அதை நாம் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். உலக கல்வியின் மூலமும், மார்க்க கல்வியின் மூலமும் நல்ல அந்தஸ்தை பெற வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் ஒழுக்கத்தை கற்று தந்தார்கள். எவர் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளையையும், நபி(ஸல்)அவர்களின் ஹதீதுகளையும் பின் பற்றி அதன் படி வாழ்க்கையை வழி நடத்துகிறாறோ அவர் சொர்க்கம் புகுவார்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்"சிறியவர்களிடம் அன்பு செலுத்துங்கள், பெரியவர்களிடம் மறியாதை செலுத்துங்கள்" என்று. இஸ்லாம் ஒரு பண்பான மார்க்கம்.
ஒழுக்கத்துடன் இருப்பவர் சொர்க்கம் செல்வார். ஆனால் எவன் ஒருவன் புகழ், தற்பெருமை,அகங்காரம், மமதையுடன் இருக்கின்றானோ அவனுக்கு மறுமையில் கூழி கிடையாது. அவன் தொழுகக் கூடியவனாக இருந்தாலும் சரியே. மீசான் தராசில் நன்மை அழித்து தீமை எழுதப்படும்.
ஒருவருடைய எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் "எண்ணங்களின் அடிப்படையிலே செயல்கள் அமயும்" என்று கூறியுள்ளார்கள்.எண்ணங்கள் சிறந்ததாக இருப்பின் நாம் இவ்வுலகிலும், மறுஉலகிலும் வெற்றியாளர்களாக இருக்க முடியும் என்று மிக அழகாக இஸ்லாமிய வாழ்வியலை விளக்கி கூறினார். அதன் படி நடக்க வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் பாளிப்பானாக.
சகோதரி அனிஷா ஃபைசல்


0 கருத்துரைகள்:
Post a Comment