அஹமதாபாத்,பிப்.17:நூற்றுக்கணக்கான இடங்களில் அஹமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன்(AMC) என்பதை அமதாவாத் முனிசிபல் கார்ப்பரேஷன் என்று மாற்றப்பட்டுள்ளது. வெளிப்படையாகவே முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அகற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு மாற்றப்பட்டு வருகிறது. அஹமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் பா.ஜ.க அரசாங்கத்தால் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி அன்று அஹமதாபாத் நகரம் தோன்றப்பட்டு 600 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆனால் AMC இதை நினைவு கூறும் விதமாக எந்த ஒரு செயலையும் செய்யவில்லை.
1411 ஆம் ஆண்டு முஸ்லிம் மன்னர் அகமது ஷா என்பவர் இந்த நகரத்தை தோற்றுவித்தார் என்று ஆதாரப்பூர்வமான வரலாறு கூறுகிறது.
விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் இன்னும் பல முக்கிய இடங்களில் உள்ள பெயர் பலகையில் அஹமதாபாத் என்பதை அழித்து அமதாவாத் என்று ஒரே இரவில் மாற்றப்பட்டுள்ளது.
நகராட்சியின் அடையாள குறியீட்டில் கூட அஹமதாபாத் என்ற பெயர் அழிக்கப்பட்டு அமதாவாத் என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படியாக நிறைய இடங்களில் இவ்வாறு மாற்றப்பட்டு வருகிறது. ஒரு ஆங்கில நாளிதழ் தவிர மற்ற அனைத்து நாளிதழ்களும் இதை நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிர உறுப்பினரான இந்த நகரத்தின் மேயர் அசிட் வோரா இதற்கான எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. வேண்டுமென்றே முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்றும், முஸ்லிம்களை இந்நகரத்தை விட்டு ஒதுக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் 600 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நகரத்தின் பெயரை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது பா.ஜ.க அரசு.
20 சதவிகிதம் முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட அஹமதாபாத் நகரம் ஜவுளி பாரம்பரியத்தில் தலைசிறந்து விளங்க கூடிய ஒரு நகரமாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமால் வெள்ளையர்களுக்கு எதிராக தனது அறப்போராட்டத்தை துவக்கிய மஹாத்மா காந்தி அவர்களின் சபர்மதி ஆசிரமம் இந்நகரத்தில்தான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1987 ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரத்தை கைப்பற்றிய ஹிந்துத்துவவாதிகள், அன்றிலிருந்து இதன் பெயரை மாற்றவேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். அவர்களோடு தொடர்புடைய அமைப்புகளான பா.ஜ.க, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஏனைய அமைப்புகள் ஒன்று சேர்ந்து நகரத்தின் பெயரை கர்னாவதி என்று மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மஹாபாரதத்தின் கதாபாத்திரமான கர்ணன் தான் இந்நகரத்தை தோற்றுவித்தார் என்று நம்புவதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் இந்த கூற்று ஒரு உறுப்படியான காரணம் இல்லை என்றும், முஸ்லிம்களை எதிர்ப்பதற்க்காகத்தான் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்று நடுநிலையான இந்துக்கள் கூட கருதுவார்கள்.
ஆனால் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசுக்கு அதிக ஆதரவு இருப்பதாலும், வலுவான சக்திமிக்க சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இல்லாததால் இதனை எதிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 2002 குஜராத் இனப்படுகொலையின் மூலம் முஸ்லிம்களை கருவருத்த நரேந்திர மோடி தற்போது முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அழிக்கவும் அவர்களை நகரத்தை விட்டு வெளியேற்றவும் தந்திரமாக செயல்பட்டு வருகிறார் என்பது பட்டவர்த்தனமாக விளங்குகிறது.
மத்தியிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் அஹமதாபாத் என்ற பெயரே உபயோகப்படுத்தப்பட்டாலும், பா.ஜ,க அரசு அஹமதாபாத்தில் வசிக்கும் மக்களின் எண்ணங்களில் அமதாவாத் என்ற பெயரையே பிரபலமாக்கி வருகிறது.
இதனை விமர்சித்த மக்களின் குடியியல் விடுதலை சங்கத்தின் (PUCL) தலைவர் ஜே.எஸ்.பந்துக்வாலா கூறுகையில், இத்தகைய செயல் பா.ஜ.க மற்று ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் விரோத போக்கை தெளிவுபடுத்துகிறது என்றார். முஸ்லிம் பெயரையோ அல்லது முஸ்லிம் பெயர்களில் இருக்கும் பாரம்பரியத்தையோ ஒருபோதும் இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழக்கூடிய இரண்டாவது மிகப்பெரிய சமூகம் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து ஒரு போதும் வெளியேறமாட்டோம்! நாம் இங்கே வசிப்பதற்க்காகத்தான் இருக்கின்றோம். முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதற்கு காவிகளிடமிருந்து நன்மதிப்பு தேவை என்ற எந்த அவசியமும் இல்லை என்று மேலும் அவர் கூறினார்.
ஜாபிர் மன்சூரி என்ற சமூக ஆர்வலர் கூறும் போது, இத்தகைய வகுப்புவாத செயல்கள் நாட்டின் முன்னேற்றத்திற்க்கு பெறும் ஆபத்தை விளைவிக்கும் என்றார்.
முஸ்லிம் பெயர்களை மாற்றுவதினால், முஸ்லிம்களை நகரத்திலிருந்து வெளியேற்றிவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள். இத்தகைய செயல்களினால் முஸ்லிம்கள் வெளியேறப்போவதுமில்லை, அவர்களுக்கும் இந்நகரத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்துவிடப் போவதுமில்லை என்று கூறினார்.
ஆயிரக்கணக்கான அடையாள சின்னங்கள், மஸ்ஜிதுகள் மற்றும் இந்நகரத்தை தோற்றுவித்த அகமது ஷா அவர்களால் கட்டப்பட்ட கோட்டைகள் உள்ளது. இத்தகைய வரலாற்று சின்னங்களை இவர்களால் ஒருபோதும் அழித்துவிட முடியாது என்று கூறினார்.
சமீபகாலமாக பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறது. பாம்பே, மெட்ராஸ், திருவனந்தபுரம், கல்கத்தா, பெங்களூர், காலிகட் போன்ற நகரங்களின் பெயர்கள் அரசியல்வாதிகளால் ஹிந்துத்துவவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. குஜராத்தில் உள்ள பரோடா என்ற நகரம் வதோதரா என்ற மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.