Saturday, January 1, 2011

ஆருஷி தல்வார் கொலைவழக்கு: டாக்டரிடம் குடும்ப உறுப்பினர் செல்வாக்கை பயன்படுத்தியதாக சி.பி.ஐ

நொய்டா,ஜன.1:உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் டாக்டர் தம்பதிகளின் 14 வயது மகள் ஆருஷி தல்வார் 2008-ம் ஆண்டு மே 16-ம் தேதி வீட்டின் படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அதே நாளில்தான் வீட்டின் உதவியாளர் ஹேம்ராஜ் என்ற நேபாளத்தைச் சேர்ந்தவரும் வீட்டின் மொட்டை மாடியில் இறந்துள்ளார். ஆனால் இவரது சடலம் இரண்டு நாள்களுக்குப் பிறகே மீட்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆருஷி தல்வார் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்ற இவ்வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க போதுமான தடயம் இல்லை என்றும் இந்த வழக்கை முடித்துக் கொள்ளப் போவதாக கடந்த புதன்கிழமை காஸியாபாத் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையில் ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நுபூர் தல்வார் ஆகியோர் ஆருஷியின் இறந்த உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டரிடம் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் செல்வாக்கை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

முதலில் இந்த கொலையை ஆருஷி தல்வாரின் தந்தை ராஜேஷ் தல்வார் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் ஆருஷியின் கொலையில் வீட்டுப் பணியாளர்கள் 3 பேருக்கு தொடர்பிருப்பதாக சந்தேகமேற்பட்டது. பின்னர் விசாரணையில் அவர்கள் நிரபராதிகள் என கண்டறியப்பட்டது.

அதேவேளையில், ஆருஷி கொலை வழக்கில் சமீபத்தில் உருவான சம்பவங்கள் கவலையை ஏற்படுத்துவதாக மக்களவை சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.

ஆருஷி கொலைச் செய்யப்பட்டுள்ளார், பின்னர் ஏன் அவருக்கு நீதிக் கிடைக்கவில்லை என்பதைக் குறித்து சிந்திக்கவேண்டும் எனவும் மீராகுமார் தெரிவித்துள்ளார்.

ஆருஷி கொலை வழக்குத் தொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, ஆருஷி வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ இயக்குநரிடம் முழு விவரங்களைக் கேட்டேன். இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? என்றும் கேட்டேன் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza