Friday, December 10, 2010

காஷ்மீர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு : ப சிதம்பரம்

காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் மத்திய பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் இன்று நடந்தது. இதில் அவர் கூறியதாவது :

காஷ்மீர் மக்களின் குறைகள், பிரச்சனைகள் மற்றும் அவர்களது எதிர்பார்ப்புகளை அறியும் நோக்கில் அங்கு நல்லெண்ண பயணம் மேற்கொண்ட தலைவர்கள் இரண்டு அறிக்கைகள் அளித்துள்ளனர். காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக அரசு 8 அம்ச திட்டம் அறிவித்த பிறகு அங்கு நல்ல மாற்றம் தெரிகிறது.

காஷ்மீர் பிரச்னை என்பது அரசியல் பிரச்சனை. இதற்கு அரசியல் தீர்வுதான் காண வேண்டும். அதற்கு முன்பு அமைதி மற்றும் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். காஷ்மீரில் இரண்டு வகையான தீவிரவாதம் உள்ளது. தீவிரவாதிகள், ஊடுருவல்காரர்களின் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அதிருப்தியில் மக்கள் ஈடுபடும் வன்முறை சம்பவங்களை கவனமாக கையாள வேண்டும்.

ஜம்மு, லடாக் பகுதிகளில் வளர்ச்சிக்கான தேவைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் வேலை வாய்ப்பு அதிகரிக்க டாக்டர் சி. ரங்கராஜன் தலைமையில் நிபுணர் குழுவை பிரதமர் அலுவலகம் அமைத்துள்ளது. இவ்வாறு பல்வேறு தரப்பினரின் அறிக்கைகள், பரிந்துரைகள் அடுத்த மாதத்துக்குள் கிடைத்துவிடும். அவற்றை அரசு தீவிரமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.

காஷ்மீர் அரசியல் தீர்வு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வரும் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும். பள்ளி, கல்லூரிகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு சிறப்புத் திட்ட நிதியுதவியாக காஷ்மீருக்கு ரூ.100 கோடி வழங்கியுள்ளது. ராணுவ சிறப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. காஷ்மீரில் தற்போது ஆரோக்கியமான மாற்றங்கள் தெரிகிறது. டிசம்பர் 6ஆம் தேதி வரை 5.56 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் அதிகம். 4.58 லட்சம் பக்தர்கள் வந்து சென்ற அமர்நாத் யாத்திரையும் அமைதியாகவே நடந்து முடிந்தது.
இவ்வாறு அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
செய்தி:இந்நேரம் 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza