தமிழகத்தில் உள்ள 257 பழமையான கோவில்களை புதுப்பிக்க மத்திய நிதி ஆணையம் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கூறினார்.
வீரபத்திரர் பக்தர் அமைப்பு சார்பில் வீரபத்திரர் 3ஆவது ஆண்டு கருத்தரங்கு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழா பள்ளியில் உள்ள கலையரங்க கூடத்தில் நடைபெற்றது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ப.ரா.சம்பத் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இந்து சமய கட்டுப்பாட்டின் கீழ் 38 ஆயிரம் கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 56 மடங்கள் அடங்கும். இந்த மடங்களில் 56 கோவில்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் 5 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 4.5லட்சம் ஏக்கர் நிலம் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும் மீதம் உள்ள நிலங்கள் மடத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
தமிழகத்தில் பெரிய, சிறிய கோவில்களில் 927 மரத்தேர்கள் உள்ளன. இதில் 300 தேர்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன. இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடியும் தருவாயில் உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 1948ஆம் ஆண்டு பழனியில் உள்ள முருகன் கோவிலில் தங்க தேர் உருவாக்கப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 48 தங்கத் தேர்கள் இயங்கி வருகின்றன. 48ஆவது தேர் ஆனைமலை மாசானி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டதாகும். இதே போல் பாரியூரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலில் தங்கத்தேர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 257 கோவில்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்கள் ஆகும். இந்த கோவில்களை புதுப்பிக்க மத்திய அரசின் 13ஆவது நிதி ஆணையம் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இந்த பணிகள் 4 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக ரூ.25 கோடி செலவில் தமிழகத்தில் உள்ள 97 கோவில்களில் மேற்கொள்ளப்படும். இந்த பணி வருகிற மார்ச் மாதம் தொடங்குகிறது. இவை 4 கட்டங்களாக நடைபெறும். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 20 கோவில்களும் அடங்கும்.
செய்தி:பாலைவனதூது
seithi
0 கருத்துரைகள்:
Post a Comment