அகமதாபாத்,அக்.30:ஷொராஹ்புத்தீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத் உள்துறை முன்னாள் இணையமைச்சர் அமித் ஷாவுக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.ஹெச்.சுக்லா, ரூ.1 லட்சம் பிணைத் தொகையும், மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அமித் ஷா மாதம் ஒருமுறை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து ஜாமீனில் விடுதலை செய்தார்.
அமித் ஷாவின் ஜாமீனுக்கு 3 வார இடைக்கால தடை விதிக்க சிபிஐ வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோளை நீதிபதி நிராகரித்து விட்டார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அமித் ஷாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூலை 25-ல் கைது செய்தனர். மூன்று மாதங்களாக சபர்மதி சிறையில் உள்ள அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார்.
அமித் ஷா சார்பில் ராம் ஜெத்மலானியும், சிபிஐ சார்பில் துளசியும் ஆஜராகினர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, சிபிஐ-யின் எதிர்ப்பை மீறி அமித் ஷாவுக்கு ஜாமீன் வழங்கினார். சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் நிருபம் நானாவதி தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்பேரில் 2005-ல் ஷொராஹ்புத்தீன் ஷேக் போலி என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டதாவும், முக்கிய சாட்சிகளான அவரது மனைவி கவுசர்பீ, நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரை போலீஸார் ரகசியமாக கொலை செய்து விட்டதாவும் சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை மறுத்துள்ள பாஜக மூத்த தலைவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அமித் ஷாவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினர். நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது பாஜக வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment