Monday, November 10, 2014

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு தீர்மானங்கள்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெமிலி ரவிஸ் மஹாலில் நவ.08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம் ரஃபீக் அஹமது, மாநில பொதுச்செயலாளர்கள் M.நிஜாம் முகைதீன், A.அப்துல் ஹமீது, முகம்மது முபாரக், மாநில செயலாளர்கள் A.அமீர் ஹம்சா, T.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர். ஆவாத் ஷெரீப் கலந்துகொண்டார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் முகம்மது பிலால் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொருளாளர் A.அம்ஜத் பாஷா நன்றியுரையாற்றினார்.
இச்செயற்குழுவில் கட்சியின் இரண்டு வருட செயல்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் கட்சி மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம்:

தமிழக மீனவர்கள் தூக்கு விவகாரம்: 

2011 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கை நீதிமன்றம் துக்குத்தண்டனை வழங்கியுள்ளது. தமிழக மீனவர்கள் தாக்குதல், மீனவர்கள் கைது நடவடிக்கை, படகுகள் பறிமுதல் என்பதை தாண்டி, மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குக்கு மத்திய அரசின் மெத்தனப்போக்கும், கையாளாகாத் தனமுமே முக்கிய காரணமாகும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் போலி வழக்கின் கீழ் தண்டனைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள், இலங்கையின் இத்தகைய நடவடிக்கையால் பெரும் அச்சத்தில் உள்ளனர். வாழ்வாதாரத்தை தேடிச்செல்லும் மீனவர்களின் வாழ்க்கையே கேள்விக் குறியாகும் நிலை உள்ளது. ஆகவே இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனைக்கு விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் தண்டனையையும் ரத்து செய்து, அவர்களை தாயகம் திரும்ப அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் சட்டரீதியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

பாம்பாறு அணை விவகாரம்:

கேரளா மாநிலம் பட்டிச்சேரி என்ற இடத்தில், பாம்பாற்றில் சுமார் 26 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்ட கேரள அரசு அடிக்கல் நாட்டியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பாம்பாறுதான் அமராவதி அணையின் நீர் ஆதாரம். அமராவதி ஆற்றின் மூலம்தான் திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயம் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆகவே அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை தடுக்கும் வகையில் கேரள அரசால் மேற்கொள்ளப்படவிருக்கும் அணை திட்டத்தை மத்திய அரசு தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் காவிரி நடுவர் மன்றத்தில், காவிரியின் கிளை நதியான அமராவதியும் உள்ளடங்கி இருப்பதால், அந்த அமைப்பின் ஒப்புதல் இன்றியும், தமிழக அரசின் ஒப்புதல் இன்றியும் அணை கட்டும் கேரளா மீது உரிய நடவடிக்கையினை மேற்க்கொள்ள வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் நலனை பாதுகாக்கும் இந்த விசயத்தில் தமிழக அரசு விரைவான நடவடிக்கை மேற்க்கொண்டு கேரள அரசின் முயற்சியை தடுக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு:

சாதிவாரியான கணக்கெடுப்பு சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சமூக நீதியை புறந்தள்ளி மத்திய அரசு அளித்த வாதத்தினை ஏற்று நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் சமூகங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவிவருகின்றன. சமூகத்தில் நிலவில் உள்ள பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகளை கலைந்து, சமூக நீதி நிலைபெற்றிட இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சில சமூகங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இந்த இட ஒதுக்கீடு என்பது சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.
இட ஒதுக்கீடு குறித்தும், அந்த சமூகத்தை மேம்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலை குறித்தும் அறிய சாதிவாரி கணக்கெடுப்பு முறையே ஆதாரமாகும். இதுமட்டுமின்றி சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் பரிந்துரை செய்யப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையின் ஆதாரமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புதான். இந்த சாதிவாரி கணக்கெடுப்பு முறையை தடை செய்யும் போது, பிற்காலத்தில் இடஒதுக்கீடு முறையும் தடை செய்யப்பட வேண்டிய சூழல் உருவாகிவிடும்.
ஆகவே சாதிவாரிக் கணக்கெடுப்பில் உள்ள அவசியத்தை உணர்ந்து மத்திய அரசு அதனை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

விகிதாச்சார பிரதிநிதித்துவம்:

தற்போது நாட்டில் உள்ள தேர்தல் முறையை திருத்தம் செய்து, அனைத்து தரப்பினரும் பங்குபெறும் சட்ட அவையை உருவாக்கும் வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை கொண்டுவர வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் ஒத்தக்கருத்துடைய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொள்ளும் கருத்தரங்கு நிகழ்ச்சியை, சென்னையில் டிசம்பர் மாத இறுதியில் நடத்தவும் எஸ்.டி.பி.ஐ கட்சி தீர்மானித்துள்ளது.

சகாயம் குழு:

தமிழகத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்த கிரானைட் குவாரி முறைகேடு, கனிம மணல் முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை மேற்க்கொள்ள, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் சென்னை உயர்நீதி மன்றம் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தின் வளங்களை காக்கும் பொறுப்புடைய தமிழக அரசு சகாயம் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவும், இருக்கின்ற கனிம வளங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மாநில அரசுக்கு கண்டனம்:

தமிழக அரசு மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய அடிப்படை தேவையான மின்சாரத்தின் கட்டணத்தை 30 சதவீதம் அளவுக்கு உயர்த்தி தமிழ்நாடு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையம் உத்தேச மின்கட்டண அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அநியாய பால் விலையேற்றம் மற்றும் உத்தேச கட்டண உயர்வை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
பால் மற்றும் மின்சாரம் இவை இரண்டுமே மக்களின் அடிப்படையான ஒன்று. முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழலே இவை சார்ந்த துறைக்கு ஏற்ப்பட்ட இழப்புக்கு காரணமாகும். இவை மீதான விலையேற்றம் என்பது விலைவாசியை மேலும் கடுமையாக்கும். ஆகவே முறையற்ற நிர்வாகத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளை மேற்க்கொண்டு நிர்வாகத்தை திறம்பட நடத்துவதற்கு உண்டான முயற்சிகளை அரசு மேற்க்கொள்ள வேண்டும். இலவசங்களை வழங்குவதற்கு கஜானாக்களை காலிசெய்யாமல், உற்பத்தியை மேம்படுத்த அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும் உயர்த்தப்பட்ட விலையேற்றத்தினை தமிழக அரசே மானியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மத்திய அரசுக்கு கண்டனம்:

நாட்டின் வளங்களை அந்நிய மற்றும் தனியார் பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கும் மோடி தலைமையிலான மத்திய அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இதுமட்டுமின்றி நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தினை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் முதல்கட்டமாக ரயில்வே துறையின் டிக்கெட் வியோகிக்கும் பணி தனியாரிடம் அளிக்கும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியார் மயமாக்கும் மத்திய அரசின் இந்த செயல்பாட்டையும் இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, அரசே பொதுத்துறை நிறுவனங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.

மழை நிவாரணம்:

சமீபத்தில் தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. காட்டாற்று வெள்ளம் காரணமாக சில இடங்களில் நீர்நிலைகளின் கரை உடைந்து வயல்வெளிகளும், குடியிருப்புகளும் நீரில் மூழ்கின. தொடர் மழையின் காரணமாக ஏராளமான விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்தன. இதுகுறித்து தமிழக அரசு கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

செயல்வீரர்கள் சேர்ப்பு:

நவ.25 முதல் டிச.25 வரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய செயல்வீரர்கள் சேர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதென இச்செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza