Monday, July 21, 2014

அரபு சமூகத்திற்கும் பொறுப்புண்டு!

வரலாற்றில் ஏராளமான போர்களும், இனப்படுகொலைகளும் அரங்கேறியுள்ளன. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் துவக்கி வைத்த இரண்டு உலகப்போர்கள் நிகழ்ந்தன.போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளின் பின்னணியில் மதம், தீவிர தேசியவாதம், இன வெறி, ஏகாதிபத்தியம் ஆகியன இருந்துள்ளதை நாமறிவோம்.

போர்கள் நடக்கும்போதெல்லாம் அதற்கு தீர்வு காண நடுநிலையான நபர்களோ, நிறுவனங்களோ, நாடுகளோ முயற்சி எடுப்பார்கள். இல்லையெனில், போர் செய்து சோர்வடைந்த இரு தரப்பும் சமரசம் செய்துகொள்வார்கள். சில வேளைகளில் அக்கிரமக்கார்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் உண்டு. 
2-வது உலகப்போரில் அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகஷாகி ஆகிய நகரங்களில் அணு குண்டுகளை வீசியது. லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். பின்னர் அமெரிக்கா ஜப்பானுக்கு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உதவி வழங்கியது.
ஹிட்லர் ஜெர்மனியில் யூதர்களை படுகொலைச் செய்ததற்காக ஆண்டு தோறும் ஜெர்மனி இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான டாலர்களை வழங்குகிறது. யூதர்களின் படுகொலைக்குறித்து (ஹோலோகாஸ்ட்) கேள்வி எழுப்புவது கூட ஐரோப்பிய நாடுகளில் குற்றகரமான செயல். 
ஆனால், 1948-ஆம் ஆண்டு முதல் இனவெறி மற்றும் மதத்தின் அடிப்படையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஒரு அரசு, அரபுலகை நிரந்தரமாக தாக்கி வருகிறது. அரபுக்களிடையே அரசியல் ரீதியாக ஸ்திரத்தன்மையற்ற சூழலையும், பிளவையும் ஏற்படுத்தி வருகிறது. சொந்த நாடுகளிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளிலோ, கடலோரங்களிலோ அபயம் தேடியவர்களை குண்டுவீசி கொடூரமாக கொலைச் செய்கிறது. 
ஃபலஸ்தீனிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கடந்த 50-60 ஆண்டுகளாக அகதிகளாக பல்வேறு அரபுநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்கள் எப்பொழுது சொந்த காலில் நிற்கத் துவங்கினார்களோ, அப்பொழுதிலிருந்து ஏதோ ஒரு காரணத்தை கூறி அவர்கள் மீது போரும், தடைகளும் திணிக்கப்பட்டு வருகிறது. ஃபலஸ்தீனுக்கு அடுத்து ஈராக், அல்ஜீரியா, சிரியா, லிபியா உள்ளிட்ட மேற்காசியாவின் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு தீர்வு இல்லை. 
இன்று உலகில் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்பவர்களும், சொந்த மண்ணிலிருந்து அகதிகளாக வெளியேறுபவர்களில் அதிகம் பேரும் முஸ்லிம்களாவர். ஏகாதிபத்திய சக்திகள் தாம் இதன் பின்னணியில் உள்ளனர் என்பது உண்மைதான்.
முதல் உலகப்போருக்குப்பிறகு பிரான்சும், பிரிட்டனும் இணைந்து உருவாக்கிய அரசியல் சதித்திட்டத்தில் அரபுக்கள் ஷியா, சுன்னி, குர்து, ஈராக்கி, சிரியன், ஜோர்டானி என பிளவுப்படுத்தப்பட்டனர்.
அரபு நாடுகளின் எண்ணெய் வளமும், நவீன ஏகாதிபத்திய சக்திகளின் இஸ்லாமோஃபோபியாவும் பிரச்சனைகளை மேலும் சிக்கலில் ஆழ்த்துகிறது. ஆனால், அரபு மக்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கும் இதில் பொறுப்புண்டு. அவர்கள் ஒன்றுபடாமலிருக்க எவ்வித காரணமும் இல்லை. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என ஒற்றுமைக்கான காரணிகள் நிறைய உண்டு. அவர்களின் தலைவர்கள் தாம் ஒற்றுமைக்கு தடையாக உள்ளனர்.
குறுகிய எண்ணங்களை கொண்ட தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் அரபுலக மக்களின் முதுகிலிருந்து ஏகாதிபத்தியத்தின் சுமையை தூக்கியெறிவதற்கு தயாராக இல்லை. அரபு வசந்தத்தின் காற்று வீசிய எகிப்தில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை தூக்கி வீசிவிட்டு ஒரு சர்வாதிகார ராணுவத்தளபதியை அதிபர் பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பதும் அதே அரபு மக்கள்தாம். அரபு சமூகம் தமது சக்தியை உணராதவரை மத்தியக் கிழக்கில் மோதல்கள் தொடர்கதையாகும்.

அ.செய்யது அலீ

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza