Thursday, July 3, 2014

ரமலானில் உள்ளத்தை புதுப்பிப்போம்!

நம்பிக்கையாளர்களுக்கு ஆத்ம பரிசோதனைக்கும், சுய விமர்சனத்திற்குமான அபூர்வமான வாய்ப்பே ரமலான்.சுய விசாரணைகள் நம்பிக்கையாளரை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.வழி கேட்டிலிருந்து நேர்வழியை நோக்கியும், நேரான வழியில் மேலும் உறுதியுடன் செயல்படவும் ரமலான் மனிதனை வழி நடத்துகிறது.ஒரு நம்பிக்கையாளனின் வாழ்க்கை என்பது சுவனத்தை நோக்கிய பயணமாகும்.மறுமையில் விசாரணை வரும் முன்னர் அடிக்கடி தன்னை சுயமாக விசாரித்துக்கொள்ளவும், தனது செயல்களை நீதியின் தராசில் சீராக தூக்கிப்பார்த்து சரிச்செய்து கொள்ளவும் கற்பிக்கப்பட்ட சமூகமே முஸ்லிம்கள்.இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர்(ரலி) அவர்களின் பிரபலமான கூற்று இங்கு கவனிக்கத்தக்கது:’நீங்கள் விசாரிக்கப்படும் முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்.நீங்கள் கணிப்பிட்டுப் பார்க்கப்படும் முன் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்’. அருட்கொடைகளின் வசந்தகாலமான ரமலானில் நம்பிக்கையாளர்களின் விசாரணை பெரும்பாலும் தன்னைக் குறித்தே அமையும்.

கடந்த கால நிகழ்வுகள் அவனது ஆன்மாவிலும், உள்ளத்திலும் வேதனையின் நீற்றலை ஏற்படுத்துவது இயல்பே.வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது பல நினைவுகள் அவனை வாட்டும்.வாழ்க்கை எனும் பாடத்தில் திருத்தங்கள் தேவை என்பதை மனிதன் புரிந்துகொள்கிறான். தான் அனுபவித்த பட்டினி மற்றும் ஏழ்மையின் கடந்த காலத்திற்கு நோன்பு மனிதனை அழைத்துச் செல்கிறது.அவனை அடக்கியாண்ட அகம்பாவம், சுயநலத்தை ஆட்டம் காண வைக்கிறது. இவ்வுலக வாழ்வில் தான் ஒரு அற்பமானவன் என்ற எண்ணத்தை மனிதனுக்கு ஏற்படுத்துவதில் நோன்புக்கு முக்கிய பங்குண்டு. இது மனிதனை மாற்றத்தை நோக்கி செலுத்துகிறது. மாற்றத்தின் மையம் உள்ளமாகும். உள்ளமே மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்துவைக்க உதவுகிறது.இது உடலின் இதர பகுதிகளுக்கும், தொடர்ந்து வாழ்வின் பல்வேறு துறைகளுக்கும் பரவலாகிறது.
எத்தனையோ ரமலான்கள் நம்மை கடந்து சென்றுவிட்டன.ஆனால், நம்மில் பலருடைய வாழ்வில் மாற்றம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.ரமலானில் பொதுவாக உடல் ரீதியான கட்டுப்பாடுகளுக்கு மட்டும் நாம் முக்கியத்துவம் அளிப்பதே இதற்கு காரணம்.பசி, தாகம், இச்சைகள் உள்ளிட்ட உடல்ரீதியான பலகீனங்களை மட்டுமே கட்டுப்படுத்துவது ரமலான் என்பதை நாம் விளங்கியிருப்பதே இதற்கு காரணம். உடல்ரீதியான கட்டுப்பாடுகளுடன் உளரீதியான கட்டுப்பாடுகளுக்கும் நாம் முக்கியத்துவம் அளித்தல் அவசியம்.நடைமுறை வாழ்க்கையில் ரமலான் மாதத்தில் நம்மவர்களுக்கு சில சந்தேகங்கள் ஏற்படும்.’சமையல் செய்யும் போது உணவை சுவை பார்க்கலாமா?’,’பல் துலக்கும்போது ஃபேஸ்டின் சுவை நாம் உணர்கிறோம்,இதனால் நோன்பு முறியுமா?’, ‘நண்பகலில் குளிக்கலாமா?’,‘உமிழ்நீரை விழுங்கலாமா?’ என்றெல்லாம் மார்க்க கல்வி தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்போம்.ஆனால், யாராவது ‘பொய் பேசினால் நோன்பு முறியுமா?’, “புறம் பேசினால் நோன்பு முறியுமா?’’யாரையாவது ஏசினால் நோன்பு முறியுமா?’ என்றெல்லாம் கேள்வி கேட்பதில்லை.காரணம், நாம் நோன்பை வெறும் உடல்ரீதியான கட்டுப்பாடாக மட்டுமே விளங்கிவைத்திருக்கிறோம்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை’(நூல்:புகாரி)
சிலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.தீயச் செயல்களையெல்லாம் விட்டொழித்துவிட்டு அவர் நேரான வழிக்கு திரும்பிவிட்டார் என்றெல்லாம் கேட்டிருப்போம்.திடீரென மீண்டும் அந்த மனிதர் வழிக்கேட்டின்பால் சென்றுவிட்டார் என்ற செய்தியும் நமது காதுகளுக்கு எட்டும்.இவை சமூகத்தில் ஸ்திரமாக நடக்கும் நிகழ்வுகளாகும்.காரணம், இவர்களுடைய மாற்றங்கள் மனதளவில் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.ஏன் இவ்வாறு நடக்கிறது?மனது அறியாமல் ஏற்படும் மாற்றங்களுக்கு ஆயுசு குறைவு.அவை நிரந்தரமல்ல.ஆகையால் முதலில் மாறவேண்டியதும், சுத்திகரிக்கப்படவேண்டியதும் உள்ளமே.மன மாற்றம் வணக்க வழிபாடுகளின் மூலம் உருவாகும்.வணக்க வழிபாடுகளில் சிறப்பான
இடத்தைப் பிடித்துள்ள நோன்பு, உள்ளத்தை இச்சைகளில் இருந்து தடுத்து நிறுத்தி, சகிப்புத்தன்மையையும், கட்டுப்பாட்டையும் பயிற்றுவிக்கிறது.உள்ளத்தை கடுமையான பயிற்சியின் ஊடே மெருக்குகிறது நோன்பு.காலங்கள்  கடந்து செல்லும்போது மனிதனின் மறதியும், அசிரத்தையும் காரணமாக உள்ளத்தில் மீண்டும் களைகளும், தளைகளும் துளிர் விடலாம்.அதற்கு உகந்தவாறு சுத்திகரிப்பு பணியும் தொடர்ந்து நடைபெறவேண்டும்.நாம் வசிக்கும் வீட்டையும்,  உறங்கும் அறையையும் அவ்வப்போது சுத்தம் செய்வது போலவே உள்ளத்தையும் அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்.அதிக இடைவெளிகள் இல்லாமல் சுத்திகரிப்பு நடைபெறவேண்டும்.இந்த சுத்திகரிப்பு பணிக்கு கால தாமதம் ஏற்பட்டால் அதற்காக நாம் அதிக விலையை கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.அது வீட்டை சுத்தப்படுத்தாவிட்டால் ஏற்படும் சாதாரண பாதிப்பு அல்ல.ஆகையால் உள்ளம் தொடர்பான விவகாரத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

மனிதனில் மிகவும் சிறப்புக்குரிய பகுதி உள்ளம்.நம்பிக்கை, சிந்தனை, அறிவு ஆகியவற்றின் மையம்.இதர அவயங்களை படைகளாக கருதினால் கட்டளையிடும் தலைமை தளபதியாக உள்ளம் திகழ்கிறது.தளபதியின் கட்டளைகளை படையினர் தவறாமல் நிறைவேற்றுவர்.ஆகையால் உள்ளம் சுத்தமடைந்தால் உடலின் இதர பகுதிகளும் சுத்தமாகும்.உள்ளம் சீர்கெட்டால் உடலின் இதர அவயங்களும் சீர்கெட்டுவிடும்.
நுஃமான் பின் பஷீர்(ரலி) அறிவிக்கிறார்கள்:நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:எச்சரிக்கை! ”உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள் அதுதான் உள்ளம்”(நூல்:புகாரி) நபி(ஸல்) அவர்கள் உள்ளத்தை பரிசுத்தமாக்க அதிகம் முக்கியத்துவம் அளித்துள்ளார்கள்.நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பல பிரார்த்தனைகளிலும் உள்ளத்திற்கு முன்னுரிமை அளித்திருப்பதை காணலாம்.”இறையச்சமில்லாத உள்ளத்தை விட்டும்S(இறைவா) உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்”(நூல்:முஸ்லிம்),’இறைவா! பனிக்கட்டியின் நீராலும் ஆலங்கட்டியின் நீராலும் என் உள்ளத்தைக் கழுவிடுவாயாக! அழுக்கிலிருந்து வெண்மை யான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தை நீ தூய்மைப்படுத்துவாயாக! (நூல்:புகாரி),’ உள்ளம் குறித்து இப்னுல் கையூம்  அல் ஜவ்ஸீ(ரஹ்) இவ்வாறு கூறுகின்றார்கள்:
“    ‘உள்ளத்தின் செயற்பாடுகள் தான் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது.உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் இவற்றைப் பின்பற்றி நம்பிக்கையை நிறைவுபடுத்துகின்றன. நோக்கம் ஆத்மா போன்றும், செயல்கள் உடல் போன்றும் அமைந்துள்ளன. ஆத்மா உடலை விட்டுப் பிரிந்தால், உடல் செத்து விடுகின்றது.
எனவே உள்ளத்தின் செயற்பாடு பற்றிய அறிவு, உடல் உறுப்புகளின் செயற்பாடு பற்றிய அறிவை விட முக்கியமானதாகும். இல்லையெனில் உள்ளத்தின் செயற்பாட்டைத் தவிர வேறு எதைக் கொண்டு ஒரு நம்பிக்கையாளரை, நயவஞ்சகரிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலும்? உடல் உறுப்புகளின் வணக்கம் மற்றும் சமர்ப்பணத்தை விட உள்ளத்தின் வணக்கமும், சமர்ப்பணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், உள்ளத்தின் வணக்கம் தொடர்ச்சியானது, ஒவ்வொரு சந்தப்பத்திலும் உள்ளம் வழிபாடு செய்வது அவசியமாகும்.”

ஆகவே, மாற்றம் உடல் கட்டுப்பாட்டுடன் மட்டும் நின்றுவிடாமல், உள்ளத்தில் தொடரவேண்டும்.அப்பொழுதே ரமலானில் நாம் நோற்கும் நோன்பு முழு பலனை தரும்.

அ.செய்யது அலீ.

Source : thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza