Friday, June 6, 2014

இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் கொலை: இந்து அமைப்புக்கு தடை?

புனேவில் இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட இந்து அமைப்பினை தடை செய்ய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசிக்கப்படும் என்று புனே காவல்துறை ஆணையர் கூறினார்.
சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (வயது 24) என்பவர் புனேவில் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் திங்கள்கிழமை மாலை தொழுகைக்குச் சென்று திரும்பினார். அப்போது, அவர் மீது திடீரென சிலர் சரமாரியாக ஹாக்கி பேட்களால் அடித்துத் தாக்கினர். அதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், மதவாதத்தை அடிப்படையாக வைத்து வன்முறையை ஏற்படுத்தி அமைதிக்கு பங்கம் வகித்த ராஷ்ட்ரீய சேனை அமைப்பை தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தை புனே காவல்துறை ஆணையர் சதீஷ் முத்தூர் நாடி உள்ளார்.
இந்த கொலை சம்பவத்தின் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மீது அபாயகரமான செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புனே நகர போலீஸ் கமிஷனர் சதீஷ் மத்தூர் தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்து ராஷ்டீரிய சேனா அமைப்பின் தலைவர் தனஞ்செய் தேசாய், வன்முறையை தூண்டும் வகையில் துண்டு பிரசுரங்களை வினியோகித்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இழிவுபடுத்தும் படங்களை, கொலையான ஷேக் மொகசின் சாதிக் வெளியிடவில்லை என்றும், இது தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
மேலும் சமூக வலைத்தளத்தில் இழிவுபடுத்தும் படங்களை வெளியிட்டதாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட படம் பிராக்ஸி சர்வர மூலம் பரப்பப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை கண்டுபிடிக்க புனே போலீசார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் உதவியை நாடி உள்ளனர்.
மராட்டிய மன்னர் சிவாஜி, சிவசேனை கட்சியின் மறைந்த தலைவர் பால் தாக்கரே ஆகியோரின் படங்களை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இழிவுபடுத்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் புனே உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஒரு வாரமாக கலவரங்கள் அவ்வப்போது வெடித்தது. அந்த வேளையில்தான் புனேவில் தொழில்நுட்ப பணியாளர் கொல்லப்பட்டார்.
சம்பந்தப்பட்ட மத அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் பிரித்திவிராஜ் சவுகான் கூறி உள்ளார்.

Source : tamil.thehindu.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza