Wednesday, May 28, 2014

தியாகத்தின் நிழலில் இஸ்லாம்! – வலசை ஃபைஸல்

புதிதான கொள்கையின் காற்று வீச தொடங்கிய காலம். சமத்துவமும், சகோதரத்துவமும் என்னவென்றே தெரியாமல் இன்று இந்தியாவில் ஆரிய பாசிச வர்க்கங்கள் கொலை, கொள்ளை, இனவாதத்தின் பெயரில் வீடுகளை சூறையாடுவது, சக மனிதன் என்பதை மறந்து மனிதாபிமானம் என்றால் அதன் நிறம் என்ன என்று கேட்கும் அளவிற்கு கருவில் இருக்கும் குழந்தையை வயிற்றை பிளந்தெடுத்து தீக்கிரையாக்கும் கோரர்களை போன்று கொடியவர்களை கொண்ட அரபு மண் அது.
அங்கே அடிமைகளுக்கு ஆனந்தமாய், உண்மையாளர்களுக்கு ஒளியாய், மனித நேயம் உடையவர்களுக்கு மணமாய் அழகிய கொள்கையுடன் சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம், அமைதி என்ற தென்றல் காற்றை சுமந்து வந்தது வஹீ என்னும் நபித்துவம்.

ஆரம்ப காலத்தில் அதிகம் இந்த கொள்கையால் ஏற்கப்பட்டவர்கள் என்னவோ அடிமைகள்தான். ஆனால் அவர்களின் வீரமும், உறுதியும், கொள்கையின் மீது கொண்ட தீராத காதலும், வணங்க தகுதியானவன் படைத்தவனே தவிர படைப்பினங்கள் அல்ல என்ற ஏகனை பற்றிய புரிதலும், அவன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது கொண்ட அன்பும் அவர்களை எதற்கும் துணிந்த வீரர்களாக மாற்றியது.
உயிர் தங்களது உடல்களிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட போதும், இரும்பு சீப்புகளை கொண்டு சதை வேறு, எலும்புகள் வேறாக தனித்தனியே பிளந்து போடபட்ட போதும் “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்), “அஹதுன் அஹத்” (அவன் ஒருவனே, அவன் ஒருவனே) என்ற முழக்கத்துடன் சந்தோஷமாய் அந்த கொடுமைகளை ஏற்று கொண்டு கொள்கை உறுதியோடு ஓரிறை கொள்கையை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்த்த பெருமைக்குரிய சமூகம் அது.
அப்படி ஒரு கோர சம்பவம் அங்கே நிகழ்ந்து போனது. இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள், சமத்துவம் பேண சொல்கிறார்கள், சகோதரத்துவத்தை பின்பற்ற சொல்கிறார்கள், தன் வீட்டில் சமைத்த உணவை தான் உண்பதற்கு முன்னால் பக்கத்து வீட்டையும் சற்று கவனியுங்கள் என்ற இரக்க குணத்தை விதைக்கிறார்கள், இனப் பிரிவுகள் அற்ற, கோத்திர (ஜாதி) சண்டைகள் இல்லாத, அவர் அவர் மார்க்கம் (வழிமுறை) அவர் அவருக்கே என்ற அமைதியை அமைக்க முயல்கிறார்கள் என்ற காரணத்திற்காக ஆதிக்க வர்க்கமும், அடக்கி ஆளத் துடிக்கும் வர்க்கமும் பல்வேறு இன்னல்களை கொடுத்தார்கள்.
வதை செய்வதற்காகவே தனி மைதானத்தை அமைத்து அங்கே இந்த அமைதி மார்க்கமாம் இஸ்லாத்தை பின்பற்றியவர்களை அழைத்து வந்து பாலைவன சுடுமணலில் ஆடைகளை களைந்து படுக்க வைத்து கை, கால்களை இருபுறமும் இழுத்து கட்டி, பெரும் பெரும் பாறைகளை நெஞ்சின் மேல் வைத்து வெப்பத்தின் உஷ்ணத்தால் துடிதுடிக்கும் முஸ்லிம்களை பார்த்து ஆனந்த தாண்டவம் ஆடி அகம் மகிழ்ந்தார்கள்.
ஒரு குடும்பமே இந்த இஸ்லாமிய கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இந்த சொல்லணா துயரத்திற்கு ஆளானது. தாய், தந்தை, மகன் என்ற மூவரும் இந்த கயவர்களின் கையில் கிடைத்தனர். தாயை அடித்து சித்திரவதை செய்யும் போது கணவனும் மகனும் “அல்லாஹு அக்பர்” என்ற முழக்கத்துடன் இந்த கொடுமைகளுக்கு பலன் மறுமையில் இனிய சுவர்க்கம் நமக்குண்டு என்று உற்சாகமூட்டுவார்கள். இதே மகனும், கணவனும் கயவர்களின் கைகளால் வதையுறும்போது தாய் அவர்களது கொள்கை உறுதியை திடப்படுத்துவார் அதே அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்துடன்.
ஒரு நாள் ஒட்டுமொத்த மக்களும் கூடி நின்ற தருணம் இஸ்லாத்தின் எதிரிகளின் தலைவனான அபூஜஹ்ல் என்னும் கொடியவன் ஒவ்வொருவராக சித்திரவதை செய்து வந்து கொண்டிருந்தான். அப்போது அத்தனை இஸ்லாமியர்களுக்கும் உந்து சக்தியாக நாளை மறுமை நமக்குண்டு; கொடுமைகளும், சித்திரவதைகளும் நிரந்தரமானவை அல்ல; ஆகவே கூறுங்கள் அல்லாஹு அக்பர், கூறுங்கள் அஹதுன் அஹத் என்ற முழக்கத்தை வானுயர உரக்க உரைத்தார் அந்த தாய்.
ஒட்டுமொத்தமாய் அகப்பட்டிருந்த சஹாபாக்கள் ஒருமித்த குரலில் அல்லாஹு அக்பர் என்ற மந்திர சொல்லை (ஏன் என்று தெரியாது, இந்த வார்த்தையை கேட்கும்பொழுது உண்மை முஸ்லிம்களுக்கு உற்சாகமும், எந்த இழப்பையும் சந்திக்கும் மனவலிமையும் ஏற்படுகிறது) தொடர்ந்து உச்சரிக்க கோபத்தில் என்ன செய்வதென்று திகைத்து கொண்டிருந்த அந்த கயவர்களின் தலைவன் அபூஜஹ்ல் அருகில் இருந்த ஈட்டியை எடுத்து அந்த அன்னையின் மர்ம ஸ்தானத்தில் ஓங்கிக் குத்தினான்.
கதறி துடிதுடித்து அல்லாஹ் ஒருவன், அல்லாஹ் ஒருவன் என்ற சப்தத்தின் நடுவே அந்த வீர மங்கையின் மூச்சு நின்று போனது. மர்ம ஸ்தானத்தில் குத்தபட்ட ஈட்டியின் முனையில் வழிந்த இரத்தில் நனைந்த தியாகத்தின் நிழலில் வளர்ந்தது இஸ்லாம் என்பதை ஏனோ இன்றைய முஸ்லிம் சமூகம் மறந்து விட்டது.
ஆனால் அல்லாஹ்வின் மார்க்கதிற்காக உழைக்கும் உண்மையாளர்களுக்கு சுமையா (ரலி) என்ற பெயரை கேட்டாலே ஒரு புதுவித தெம்பும், தியாகம் செய்யும் மனப்பாங்கும் இயற்கையாய் மனதுள் எழுந்து விடுகிறது.
வாழ்க்கையை வீணிலும், விளையாட்டிலும் கழித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலோருக்கு முஸ்லிமான தாய், தந்தையின் வயிற்றில் பிறந்து முஸ்லிமாக பரிணமித்ததன் விளைவு இஸ்லாத்தின் அருமையும், அதன் மேன்மையும் விளங்காமல் போனது.
இந்த இஸ்லாம் நம்மை வந்து அடைந்ததன் பின்னணியில் இஸ்லாம் என்னும் பரந்து விரிந்த ஆலமரத்தின் வேர்களை பார்த்தால் இரத்தத்தாலும், சதையாலும் உரமிட்டு உதிரத்தை நீராக்கிய தியாகம் தெரியும்.
மோடிகளின் வருகையினால் அஞ்சி நிற்கும் இந்த சமூகம் சரியான திட்டமிடலுடன், வலுவான வழிகாட்டுதலின் அடிப்படையில், கொள்கை உறுதியுடன் தியாகத்திற்கு தயாரானால் அன்று வென்ற இஸ்லாம் இன்றும் வெல்லும். அது தியாகத்தின் நிழலில் மட்டுமே சாத்தியமாகும் இன்ஷா அல்லாஹ்.
வலசை ஃபைஸல்
Source: thoothuonline.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza