“சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் இரயிலில் நடந்த குண்டுவெடிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று எஸ்.டி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
01.05.2014 காலை 7.15 மணியளவில் பெங்களூரிலிருந்து கவுகாத்திக்கு சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும் பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது நடைமேடைக்கு வந்து நின்ற அடுத்த 10 நிமிடங்களில் இரயிலின் எஸ்4, எஸ்5 பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இதில் இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கக்கூடியது, கடும் கண்டனத்திற்குரியது.
அமைதியாக உள்ள தமிழகத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள இந்த குண்டு வெடிப்பு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடத்தப்பட்ட இதுபோன்ற பயங்கரவாத வன்முறைகளை ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது. இந்த குண்டுவெடிப்பு எந்த காரணத்திற்காக நடத்தப்பட்டாலும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் அவசர கதியில் செயல்படாமல், உண்மையான குற்றவாளிகளை விசாரித்து கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க வேண்டும். தேசிய புலனாய்வுத் துறையும் இதுகுறித்து விசாரணையை நடத்த வேண்டும்.
இதுமட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்து ரயிலில் வெடிகுண்டு தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டதா எனவும், அல்லது வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது வெடித்ததா எனவும் சந்தேகங்கள் நிலவுவதால் அதனடிப்படையிலும் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளம்பெண் ஸ்வாதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்களும் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்களையும் மிக விரைவாக கண்டுபிடித்து விரைவாக தண்டனை வழங்க வேண்டும் என்றும், இதனால் தமிழக மக்களிடம் நிலவி வரும் அச்சத்தை போக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள நிவாரண உதவிகளை அதிகரித்து வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
source : thoothu online.com
0 கருத்துரைகள்:
Post a Comment