குவஹாத்தி: அஸ்ஸாமில் கடந்த இரண்டு நாட்களாக போடோ தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட முஸ்லிம்களின் பலி எண்ணிக்கை 11 லிருந்து 32 ஆக உயர்ந்துள்ளது.
இங்கு சமீபத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24–ந் தேதியுடன் 3 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் போடோ இன வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு போடோ தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்தனர்.
ஆனால் அவர்கள் போடோ வேட்பாளர்களை ஆதரிக்காமல் உல்பா இயக்க வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறி போடோ தீவிரவாதிகள் தேர்தல் முடிந்ததும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கோக்ரஜ்கார் மாவட்டம் துராமரி, தோதான் பகுதியிலும் பலபாரா கிராமத்திலும் தீவிரவாதிகள் சைக்கிளில் சென்று பெண்கள், குழந்தைகள் என கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டனர்.
பாலாபாரா கிராமத்தில் 3 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த கிராமத்தில் மட்டும் துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள்.
இதற்கிடையே அருகில் உள்ள பக்சா மாவட்டத்துக்கும் கலவரம் பரவியது. இங்கு தீவிரவாதிகள் கூட்டத்தில் 9 பேர் பலியானார்கள். இதனால் முஸ்லிம்களின் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இது வரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அனைவரும் சிறுவர்கள், பெண்கள்.
கலவரம் மற்ற மாவட்டங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தெருக்களில் கொடி அணி வகுப்பு நடத்தி ரோந்து சுற்றி வருகிறார்கள்.
கலவரத்தை கட்டுப்படுத்த கோக்ரஜ்கார், பக்சா, சிராங்க் ஆகிய 3 மாவட்டங்களில் ஊரடங்கு ஊத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதலில் ஈடுபடும் தீவிரவாதிகளை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக மாநில டி.ஜி.பி காகென் சர்மா தெரிவித்தார்.
மக்கள் அமைதி காக்குமாறும், யாரும் இருப்பிடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் முதல்வர் தருண் கோகாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராமங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி மக்களை அமைதிப்படுத்தி வருகிறார்கள்.
மேலே உள்ள படத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் குவஹாத்தியில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தஸ்லீமா காத்தூன் என்ற ஒன்றுமறியா 4 வயது சிறுமியை அவளுடைய தாத்தா ஆறுதல் படுத்துகிறார்.
போடோ தீவிரவாதிகள் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலில் பலி எண்ணிக்கை அன்றாடம் உயர்ந்து கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. பலர் படுகாயம் அடைந்தனர் என்றும் தகவல் வெளியாகியது.
ஆனால், மேலும் மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாகவும், இதை அடுத்து பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது என்றும் இன்று வெளியான தகவல் தெரிவிக்கிறது.
மேலே உள்ள படத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் குவஹாத்தியில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புலேஜா காத்தூன் என்ற 25 வயது பெண்ணுக்கு ஒரு நர்ஸ் சிகிச்சை அளிக்கிறார்.
கடந்த 2012ம் ஆண்டு போடோ தீவிரவாதிகள் முஸ்லிம்கள் மேல் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டார்கள். நான்கு லட்சம் முஸ்லிம்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் வீடுகளை விட்டும் அகதிகளாக வெளியேறினார்கள்.
அஸ்ஸாமில் வாழும் முஸ்லிம்கள் போடோ தீவிரவாதிகளால் வந்தேறிகள் என்று கூறப்பட்டு தொடர்ந்து கொடூர தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் வரலாற்று ரீதியாக அவர்கள் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறித்து THE WOLVES என்ற ஆவணப் படம் தெளிவாக விளக்குகிறது. கீழே உள்ள இணைப்பை அழுத்தி அந்த ஆவணப் படத்தை காணலாம்:
SOURCE: THOOTHU ONLINE.COM
0 கருத்துரைகள்:
Post a Comment