முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் அகதிகள் முகாம்களில் இருந்து வெளியேற்றமாட்டோம் என்று எஸ்.டி.பி.ஐ தலைமையிலான பிரதிநிதிக் குழுவிடம் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் உ.பி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மாஸ்டர் ஸாஹித் தலைமையிலான அகதிகளுக்கான பிரதிநிதிக் குழுவுடன் லக்னோவில் நடத்திய பேச்சுவார்த்தையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் அகதிகளை முகாம்களில் இருந்து வெளியேற்றமாட்டோம் என்று அகிலேஷ் யாதவ் உறுதி அளித்தார்.
முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கோரி எஸ்.டி.பி.ஐ தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் வலுவான போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சமாஜ்வாதிக் கட்சியின் தலைவரான முலாயம்சிங் யாதவ் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொறுப்பை அவர் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு வழங்கினார்.
முகாம்களை நடத்துவதற்கு தேவையான வசதிகளை செய்பவர்களும், போலீசும் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி சர்வே நடத்தவும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் இழப்பீடு கிடைக்காதவர்களை கண்டுபிடித்து உரிய இழப்பீடு வழங்கவும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் முயற்சியால் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களை ஒன்றிணைத்து அமன் என்ற கமிட்டி உருவாக்கப்பட்டது. அகதிகளை மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் முகாம்களில் இருந்து வெளியேற்ற அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை அமன் கமிட்டி வலுவாக தலையிட்டதால் தடைப்பட்டது.
அமன் கமிட்டியின் தலைமையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து தர்ணா போராட்டமும் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் மலேக்பூர் முகாமிற்கு பொறுப்பு வகிக்கும் முஃப்தி அஸ்லம் மற்றும் பல்வேறு முகாம்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment