Monday, December 23, 2013

முஸஃபர் நகர்: குளிரை தாக்குப் பிடிக்க பாப்புலர் ஃப்ரண்ட் உதவி!


PFI

முஸஃபர் நகர்: உத்தர பிரதேச மாநிலம் முஸஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாம்களில் துயரமான சூழல் கடுமையான குளிரால் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அங்கு நடத்தி வந்த துயர் துடைப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக முகாம்களில் நிவாரணப் பணிகளுக்கு தலைமை வகிக்கும் மவ்லானா முஹம்மது ஸதாப் தெரிவித்தார்.

கடுமையான குளிரின் காரணமாக ஏராளமான குழந்தைகள் மரணித்த செய்தியைத் தொடர்ந்து, அச்சூழலுக்கு காரணமான நிலைமைகளை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தன்னார்வ சேவைத் தொண்டர்கள் ஆய்வு செய்துள்ளனர் என்று மவ்லானா ஸதாப் கூறினார்.
போர்வைகள், படுக்கைகள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான குழந்தைகளுக்கான உணவையும் பாப்புலர் ஃப்ரண்டின் தன்னார்வ சேவைத் தொண்டர்கள் விநியோகித்தனர். ஜோலா, லோயி, ஹுஸைன்பூர், கேடா, மலக்பூர், பாத்தெட், ரோதன், சுனேதி ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் கடுமையான துயரத்தை அனுபவிக்கும் குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 300 கிட்டுகள் வழங்கப்பட்டன.
முஸஃபர் நகரில் உள்ள அகதிகள் முகாமில் 3-வது தடவையாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடுமையான குளிரில் குழந்தைகள் மரணித்த பிறகும் உ.பி. மாநில அரசு அசையாமல் இருக்கும் கொள்கையை கடைப்பிடிப்பது கண்டனத்திற்குரியது என்று ஸதாப் தெரிவித்தார்.
கூடாரங்களில் உள்ள அகதிகளை உடனடியாக கட்டிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இல்லையெனில் மரணங்களுக்கு பொறுப்பு உ.பி. மாநில அரசையே சாரும் என்று அவர் நினைவூட்டினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza