Thursday, December 26, 2013

ஏ.கே.47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிக்கோவ் (94) மரணம்



மாஸ்கோ: ஏ.கே.47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிக்கோவ் (94) திங்கள்கிழமை மரணம் அடைந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக ரஷ்யாவின் உட்முர்ஷியா குடியரசுத் தலைநகர் இஷ்விஷ்க்கில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உட்முர்ஷியா குடியரசின் செய்தித் தொடர்பாளர் விக்டர் சல்கோவ் தெரிவித்தார். சோவியத் ஒன்றியப் படையணியின் முக்கிய துப்பாக்கியாக இருந்த ஏகே 47, பின்னாளில் உலகின் பல பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகிறது.


20 ஆம் நூற்றாண்டில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றான ஏகே 47 துப்பாக்கியை இராணுவ வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தத் துப்பாக்கியை இயக்குவது எளிதானது என்பதால் தேசிய இராணுவங்களும்,கிளர்ச்சிப்படைகளும் அதனை விரும்பிப் பயன்படுத்தினர்.
இந்தத் துப்பாக்கியை வடிவமைத்த மிக்கேயல் கலாஷ்னிக்கோவ், இரண்டாம் உலகப் போரின்போது சோவியத்தின் டாங்கிப் படைகளில் மெக்கானிக்காக பணியாற்றியவர்.
போரில் காயப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சமயம், சோவியத் படைகளின் தாக்குதல் திறன் குறித்து கவலைப்பட்ட அவர் புதிய துப்பாக்கியை உருவாக்கினார். 1947 இல் அந்த துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்ததால் அது ஏகே 47 என்று அழைக்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சம் குறித்து பிபிசியிடம் பேசிய பிரிட்டனின் இராணுவ தளவாட நிறுவனத்தில் துப்பாக்கி நிபுணராக இருக்கும் ஜானாத்தன் பெர்குசன், "இந்தத் துப்பாக்கி மற்ற துப்பாக்கிகளைவிட சிறப்பாக இருந்தது.
போல்ட் ஆக்ஷன் துப்பாக்கியை போல இது சக்திவாய்ந்தது கிடையாது என்றாலும், இது பயன்படுத்த எளிதானது" என்றார்.
மிக்கேயல் கலாஷ்னிக்கோவ் ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடன் கூடப் பிறந்தவர்கள் 19 பேர். இந்தக் கண்டுபிடிப்பால் அவருக்கு தனிப்பட்ட முறையில் பணம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் அதேநேரம் சோவியத் அரசும்,பின்னாளில் ரஷ்ய அரசும் அவருக்கு அரசு விருதுகளை அளித்து கௌரவித்துள்ளன.
சோவியத் ஒன்றியத்திலும், பிறகு சீனாவில் டி 56 என்ற பெயரிலும், இன்ன பல நாடுகளிலும் ஏகே துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன. 10 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட நாடுகளும், பல கிளர்ச்சிக் குழுக்களும் இந்த துப்பாக்கியை ஒரு கட்டத்தில் பயன்படுத்தின. இன்னமும் இவை ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கின்றன. ஏராளமான உயிர்சேதத்தை இந்த துப்பாக்கி விளைவித்துள்ளது. இருந்தும் இந்த துப்பாக்கியை கண்டுபிடித்தற்காக தான் வருந்தவில்லை என்றே இறுதிவரை கலாஷ்னிக்கோவ் கூறிவந்தார்.'நாட்டைக் காக்க நான் தயாரித்த ஆயுதத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு நான் பொறுப்பேற்க முடியாது' என்றே அவர் தொடர்ந்து கூறிவந்தார்.
வடிவமைத்தவர் இறந்து போனாலும், ஏகே 47-இன் பயன்பாடுகள் இன்னும் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza