லண்டன்: உலகளவில் இருபது கோடிக்கும் அதிகமான மக்கள் நச்சு மாசுக்கள் காரணமாக பாதிப்படையக் கூடிய அபாயகரமான நிலையில் உள்ளனர் என்று சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கையில் உலகளவில் மிகவும் நச்சுத்தன்மை அபாயம் வாய்ந்த பத்து இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நியூயார்க்கிலுள்ள பிளாக்ஸ்மித் நிறுவனமும், சுவிட்சர்லாந்திலுள்ள கிரீன் கிராஸ் அமைப்புமே இந்த ஆய்வை நடத்தியுள்ளன.
மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவின் தலைநர் அக்ராவிலுள்ள அக்போபுளோஷி குப்பை மேடே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த மாசடைந்த இடம் என்று கூறியுள்ளது.
எழுபது நாடுகளில் சுமார் மூவாயிரம் இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த இரண்டு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
நச்சுத்தன்மை உள்ள மாசு காரணமாக பொது சுகாதாரம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதன் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் கடும் உடல்நலக் குறைபாடுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
குப்பை கொட்டும் இடங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக மாறுவதை தடுக்க உடனடி நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கோரியுள்ளது.
மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த அபாயகரமான இடமாக கண்டறியப்பட்டுள்ள கானா நாட்டின் அக்பொக்புளோஷி குப்பை மேடு பகுதியில் ஆண்டொன்றுக்கு மேற்கு நாடுகளிலிருந்து இரண்டு லட்சம் டண்களுக்கு அதிகமான அளவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும், அவற்றிலுள்ள கழிவுப் பொருட்களை பிரித்தெடுக்கும்போது வெளியாகும் நச்சுத்தன்மை வாய்ந்த மாசுக்களே அங்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
பல நாடுகள் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களால் சுற்றுச்சூழல் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டு, பொது சுகாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன என்பதை உணர்ந்துள்ளன என்றும், அதை சரி செய்வதற்கு பன்னாட்டு அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்ற இணக்கம் தெரிவித்துள்ளன எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்திலுள்ள சுகிந்தா குரோமியம் சுரங்கப் பகுதி மற்றும் தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் நிலமைகள் கணிசமாக முன்னேறியுள்ளன எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment