Tuesday, October 8, 2013

சவூதி: ஜித்தா இந்திய துணை தூதரகத்தின் அவசர அறிவிப்பு!

ஜித்தா: சவூதி ஜித்தா இந்திய துணை தூதரகம் இன்று (07.10.2013) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சவூதி அரசின் 'நிதாகத்' புதிய தொழிலாளர் கொள்கையின் மூலம் வெளிநாட்டவர்கள் தங்களது விசா நிலையை சரி செய்து கொள்ள வரும் நவம்பர் 3ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்நிலையில், இதுவரை தனது நிலையை சரி செய்து கொள்ளாத சவூதி வாழ் இந்தியர்கள் அவர்களின் நிலையை சரி செய்து கொள்ளும் விதமாக இந்தியத் தூதரகங்கள் இரவு பகலாக பணி புரிந்து இந்தியர்களுக்கு உதவி வருகின்றன.

எனினும், சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள சில இந்தியர்கள் இதுவரை தங்களது கைரேகை உள்ளிட்ட சவூதி சட்டதிட்டத்தின் முக்கிய நடைமுறைகளை சரி செய்து கொள்ளவில்லை என்பதாகவும், இதனால் அவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும்,  சவூதி அரசு அதிகாரிகளின் வட்டாரங்களிலிருந்து இந்திய தூதரகத்திற்கு தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன
அதன்படி இது வரை கைரேகை மற்றும் தேவையான பல ஆவணங்களை சரி செய்து கொள்ளாதவர்கள், கெடுக் காலத்திற்குள் எந்தவித பிரச்சனையுமின்றி நாடு திரும்ப ஏதுவாக, வரும் அக்டோபர் 12,13,14-ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில்) ஜித்தா இந்திய துணை தூதரக வளாகத்தில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனவே, மேற்கூறப்பட்டுள்ள மூன்று தினங்களில் ஒரு நாளில் காலை 09:30 மணி முதல் மாலை 04:00 மணி வரை நடைபெறும் பதிவு நேரங்களில் சவூதி சட்டத்திற்கு விரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் தங்களது ஒரிஜினல் பாஸ்போர்ட் அல்லது ஒரிஜினல் இக்காமா, புகைப்படம் மற்றும் குடியுரிமை ஆவணங்கள் / இதர தேவையான ஆவணங்களுடன், கட்டாயமாக வந்து பதிவு செய்து தங்களது நிலையை சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுவே இறுதி வாய்ப்பாகும். எனவே இந்த வாய்ப்பினை சவூதி புதிய தொழிலாளர் கொள்கையினால் பாதிக்கப்பட்ட அனைத்து இந்தியர்களும் பயன்படுத்திக் கொள்ளவும்.
இப்படிக்கு,
இந்திய துணை தூதரகம்,  ஜித்தா
source : Inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza