Wednesday, September 11, 2013

பாடப் புத்தகங்களில் காவி மயம்!-எதிர்ப்பு வலுக்கிறது!

புதுடெல்லி: பள்ளிக்கூட பாடப் புத்தகங்களில் மீண்டும் காவிமயம். இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது.
கர்நாடாக மாநிலம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆளும் சில மாநிலங்களிலும் வரலாறு, சமூக அறிவியல் ஆகிய பாடப் புத்தகங்களில் கற்பனைக் கதைகளை இணைத்துள்ளனர்.
இஸ்லாம், கிறிஸ்தவம் குறித்து மாணவ, மாணவிகளின் உள்ளங்களில் வெறுப்பை உருவாக்கும் வகையில் கருத்துகள் பாடப் புத்தகங்கள் முழுக்க காணப்படுகிறது. அறிவியல் பாடப் புத்தகங்களில் கண்டுபிடிப்புகளுக்கு பதிலாக புராணக் கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

பா.ஜ.க. ஆட்சி புரிந்த கர்நாடகா மாநிலத்தில் அக்கட்சி ஆட்சி புரிந்த காலகட்டத்தில் பாடப் புத்தகங்கள் காவிமயமாக்கப்பட்டு, மதத் துவேசம் புகுத்தப்பட்ட விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
காவிமயமாக்கப்பட்ட பாடப் புத்தகங்களை வாபஸ் பெற வேண்டும், சமூக அறிவியல், ஹியூமானிட்டீஸ் (மனிதநேயம்), வரலாறு ஆகிய பாடப் புத்தகங்களை பரிசோதிக்க சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்று  புகழ்பெற்ற 24 கல்வியாளர்கள் டெல்லியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாடப் புத்தகங்கள் நேசனல் கரிக்குலம் ஃப்ரேம்வர்க்கிற்கு (என்.சி.எஃப்.) எதிரானது என்று சுட்டிக் காட்டுகின்றனர். இந்த அறிக்கையில் பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பர், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சோயா ஹஸன் உள்ளிட்ட பிரமுகர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
Committee for Resisting Saffronisation of Text Books (சி.ஆர்.எஸ்.டி.) என்ற அமைப்பு உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
ஆறாம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பாடத்தில் ’பாரத மத்து ஹொரப்ரபஞ்ச’ (இந்தியாவும் வெளியுலகும்) என்ற அத்தியாயத்தில் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் தனிமைப் படுத்தும் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அரபுக்கள் இந்தியாவை ஆக்கிரமித்தார்கள் என்றும் இவ்வாறுதான் இஸ்லாம் இந்தியாவில் பரவியதாகவும் அந்த பாடப் புத்தகம் அவதூறுகளை அள்ளி வீசுகிறது. வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வந்த அரபுக்களின் குணநலன்களையும், நடத்தைகளையும் கண்டு சாதிக் கட்டமைப்பின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்ற உண்மையை இந்த பாடப் புத்தகம் புறக்கணிக்கிறது.
மேலும் செங்கிஸ்கான், தைமூர் ஆகியோர் கொடுமைகள் புரிந்ததாக கூறும் கருத்துகள் இந்த அத்தியாயத்தில் நிரம்பியுள்ளன. கத்தோலிக்க சபையின் உள்ளே பாதிரியார்களின் ஒழுக்கமின்மை குறித்தும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகம் கற்பிக்கிறது.
அதே வேளையில் ‘Religious and social reforms movement’ என்ற 6, 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இந்தியாவை இன்று கூட பிடித்து உலுக்கும் சாதிக் கட்டமைப்பு, தீண்டாமையைக் குறித்து வெறும் ஒரிரு வார்த்தைகளில் மட்டுமே கூறப்பட்டுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிருஷ்ணகுமார், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி, மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி, முன்னாள் கேபினட் செயலாளர் நரேஷ் சந்திரா, த ஹிந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம், யு.ஆர். அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்நாட், சந்திரசேகர கம்பார், கர்நாடகா மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பி.கே. சந்திரசேகர், ஷில்லாஹ் டைம்ஸ் ஆசிரியர் பாட்ரீஷியா முகீம், அசின்வா நாயக், இந்து அக்னிஹோத்ரி, ராஜீவ் பார்கவா, கர்நாடகா மாநில பிரபல கல்வியாளர் சதக்‌ஷரப்பா ஷெட்டார், பசவராஜா காட்குடி, ஒ.எல். நாகபூஷண ஸ்வாமி, எழுத்தாளர் பி.ஜி. வர்கீஸ் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களும், அமைப்புகளும் பாடப் புத்தகங்கள் காவிமயமாக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Info : thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza