புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெற்று வரும் கலவரத்தைத் தடுக்கத் தவறியதோடு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத சமாஜ்வாதிக் கட்சி தலைமையிலான அரசைக் கண்டித்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா சார்பாக டெல்லியில் உள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் வீட்டை நோக்கி கண்டனப் பேரணி மற்றும் தர்ணா நடைபெற்றது.
ஜந்தர் மந்தரில் இருந்து புறப்பட்ட எஸ்.டி.பி.ஐ. தொண்டர்களை போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்துகொண்டு எஸ்.டி.பி.ஐ.யின் டெல்லி மாநில தலைவர் வழக்கறிஞர் முஹம்மது அஸ்லம் கூறியது:
2014-ஆம் ஆண்டு தேர்தலைக் குறி வைத்து பாரதீய ஜனதா கட்சி வகுப்புக் கலவரத்தை உருவாக்குகிறது. குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைகளின் சூத்திரதாரிகளில் ஒருவரும், மோடியின் மனசாட்சியை பாதுகாப்பவருமான அமித் ஷாவிடம் உ.பி. மாநிலப் பொறுப்பை அளித்து முஸ்லிம் எதிர்ப்புணர்வை உ.பி.யில் தீவிரப்படுத்துகிறது பாரதீய ஜனதா கட்சி.அகிலேஷ் யாதவ் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு 451 கலவரங்கள் உ.பியில் நடந்துள்ளது என்று அஸ்லம் கூறினார்.கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை சட்டமாக்கவேண்டும் என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.கலவரத்தை நடத்தும் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை முன்னெச்சரிக்கையாக கைதுச் செய்து சிறையில் அடைக்கவேண்டும், மக்களுடைய உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும், கலவரங்களைக் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும், கலவரங்களில் பா.ஜ.கவின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பேரணியில் கலந்துகொண்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்கள் எழுப்பினர்.
Info : thoothu online.com
0 கருத்துரைகள்:
Post a Comment